Saturday, 27 December 2025

'சங்கீத சாகித்ய வித்வான்' திருவீழிமிழலை எஸ். கல்யாணசுந்தரம் பிள்ளை இசையமைத்த 'நவரத்தின கீர்த்தனை மாலை'


 


நவரத்ன கீர்த்தனை  மாலை எனும் இந்த இசை நூல், 1966 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் எடமணல் லிங்கப்பா நாயுடுவினால் (1800-1871) இயற்றப்பட்ட 11 கீர்த்தனைகள் மற்றும்  1 பதமும், அடங்கியுள்ளது.  இந்நூலைத் தொகுத்து வெளியிட்டவர், திரு. வி.ராமச்சந்திரா நாயுடு ஆவார்.

இப்பாடல்களுக்கு இசையமைத்தவர், 'சங்கீத சாகித்ய வித்வான்' திருவீழிமிழலை திரு. எஸ்.கல்யாணசுந்தரம் பிள்ளை ஆவார். இவர், 'திருவீழிமிழலை சகோதர்கள்' என்று அழைக்கப்பட்ட புகழ் பெற்ற நாகசுர கலைஞர்களான சங்கீதக் கலாநிதி திரு.எஸ்.சுப்ரமண்ய பிள்ளை, திரு.எஸ்.நடராஜசுந்தரம் பிள்ளை சகோதரர்களின் இளைய சகோதரர் ஆவார்.


திரு.கல்யாணசுந்தரம் அவர்கள், வாய்ப்பாட்டில் நிபுணராக விளங்கினார். இசைஞான யோகி காஞ்சிபுரம் நயினா பிள்ளையின் மாணவராவார். இவர், சொந்தமாகப் பல பாடல்களையும் இயற்றியுள்ளார். மேலும், வி.இராமச்சந்திரா நாயுடு அவர்கள் இயற்றியுள்ள 'வேங்கடேஸ்வர கீர்த்தனை மாலை' எனும் நூலில் அமைந்துள்ள பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

எடமணல் எஸ்டேட்டின் ஸ்தாபகரான லிங்கப்பா நாயுடு அவர்கள், உயர்ந்த செல்வந்தராகவும், சங்கீதக் கலைஞர்களுக்கு ஆதரவளித்த வள்ளலாகவும் விளங்கியவர். இவர், பிற்காலத்தில் வியாதியினால் நலிவடைந்து துன்பப்படும் போது, இறைவனைத் துதித்துப் பாடல்கள் இயற்றி, துன்பத்திலிருந்து விடுபட்டுள்ளார். இவர் 200 கீர்த்தனைகளுக்கு மேல் இயற்றிருந்தாலும், 12 பாடல்களே கிடைத்துள்ளன. இவரது பரம்பரையைச் சேர்ந்த வி.ராமச்சந்திரா நாயுடு அவர்களால் இக்கீர்த்தனைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 



'நவரத்ன கீர்த்தனை மாலையில், 6 தெலுங்குப்  பாடல்களும் 6 தமிழ்ப் பாடல்களும் அமைந்துள்ளது. திரு.லிங்கப்பா நாயுடு (1800-1871) அவர்கள், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் காலத்தில் வாழ்ந்தவர். இதனால், தியாகராஜர் காலத்திலேயே ஏராளமான தமிழ் கீர்த்தனைகளும் பாடப்பட்டதை அறிய முடிந்தாலும், தகுந்த சிஷ்யப் பரம்பரையும் அச்சு வடிவங்களும் இல்லாததால், பல இசை வடிவங்கள் அழிந்து விட்டதை உணர  முடிகிறது.

திரு. கல்யாணசுந்தரம் அவர்கள், இப்பாடல்களுக்கு இசையமைத்துள்ள முறையினை  தனது உரையில் கூறும் போது, இப்பாடல்கள் பழைய கர்னாடக இசை முறையில் அமைந்துள்ளதாகவும், தாளச் சூட்சுமங்களுடன் அமைந்துள்ளதால், அவற்றின் சந்த அடிப்படையிலேயே இசையமைத்துள்ளதாகவும் கூறியுள்ளது, குறிப்பிடத்தக்கதாகும்.  இதனால், தமிழ் மொழியின் இயல்பையும் அதன் தனித்த இசை மரபையும் அறிய முடிகிறது. முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை பாடல்களும் இவ்வகையில் அமைந்ததே! இப்பாடல்களுக்கு இசையமைத்துள்ள திருப்பாம்புரம் என்.சுவாமிநாத பிள்ளையவர்களும், இம்முறையிலேயே இசையமைத்துள்ளார்கள் என்பதை, அப்பாடல்களின் இசையமைப்பிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

மேலும், தாளச் சூட்சுமங்கள் அறிந்தவர்களினால் மட்டுமே இப்பாடல்களுக்கு இசையமைக்க முடியும் என்று கூறியுள்ள கல்யாணசுந்தரம் பிள்ளையவர்கள்,  தனது குருநாதர் காஞ்சிபுரம் நயினா பிள்ளையால் தனக்குப் போதிக்கப்பட்ட தாள நுட்பச் செய்யுளையும் அதற்கு உதாரணமாகக் கூறியுள்ளது சிறப்பானதாகும்.

பராத்ம நஸ்த்ததாகாசம் வாயு ரக்னிஜலஸ்ததா

பூமிஸ்ததா மணுச்சைவ  ராஜதர்மார்த்தி சத்யதம்

புண்டரீகம் ததாஜாத மதிசூக்ஷ்மம் ப்ரகீர்த்திதம்

 

அக்கினியில் உஷ்ணமும், பூவில் மனமும் இருப்பது போல், அருஞ்சொற்களில் தாளத்தின் தன்மை அமைந்துள்ளது, என்பது இதன் பொருளாகும்.

திரு. கல்யாணசுந்தரம் பிள்ளை, சாவேரி, சகானா, சாமா, காமாஸ் போன்ற பழைய ராகங்களிலும், காங்கேயபூஷணி, ராகவர்த்தனி போன்ற அரிய ராகங்களிலும்  சிறப்பாக இசையமைத்துள்ளார். இப்பாடல்கள் வழக்கமான பாடல்களைப் போல் அல்லாது, தனித்தன்மையுடன் அரங்கிசைக்கு உரியதாக, இனிமையாக அமைந்துள்ளது. ஆனால், இப்பாடல்கள் கச்சேரிகளில் பாடப்படாமல் மறைவாகவே இருந்து வருவது  வருந்தத்தக்கதாகும். வருங்காலத்தில் இப்பாடல்களை நிகழ்ச்சிகளில் பாடியும், வாசித்தும் வரவேண்டியது நமது கடமையும், அப்பெரியார்களின் இசைத் தொண்டிற்கு நாம் செய்யும் வணக்கமும் ஆகும்.

 

 

No comments:

Post a Comment