Friday, 9 August 2024

72 மேளகர்த்தா இராகங்கள் வரலாறு

 

72 மேளகர்த்தா  இராகங்கள் வரலாறு  -  ப.கோபாலகிருஷ்ணன் 

    இந்திய இசையானது, இரு வகையில் விளங்குகிறது. தென்னிந்தியாவில் வழங்கும் இசை கர்னாடக இசையென்றும், வட இந்தியாவில் வழங்கும் இசை இந்துஸ்தானி என்றும் அழைக்கப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டு வரை, இந்தியா முழுவதும் ஒரே விதமான இசை மரபே வழக்கத்தில் இருந்தது. வட இந்தியாவில் முகலாயர்கள் படையெடுப்பினால், பாரசீக இசையின் கலப்பு ஏற்பட்டு இந்துஸ்தானி இசை தோன்றியது. ஆனால், தென்னிந்தியாவில் அத்தகைய படையெடுப்பு பெரிய அளவில் நடை பெறாததால், கலப்பு ஏதுமின்றி தற்காலம் வரை கர்னாடக இசையாக நிலைத்து நிற்கிறது.

    கர்னாடக இசையென அழைக்கப்படும் தென்னிந்திய இசையில், இராகங்கள் மேளகர்த்தா என்றும், ஜன்யம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேளகர்த்தா என்பது தாய் ராகங்களாகும் ; அதிலிருந்து பிறந்த சேய் இராகங்கள், ஜன்ய ராகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

    சப்த ஸ்வரங்கள் எனப்படும் ஏழு ஸ்வரங்களையும் கொண்ட ராகங்கள் தாய் ராகங்கள் அல்லது மேளகர்த்தா எனப்படும். மேளம் எனப்படுவது வடமொழியில் குழு அல்லது தொகுதி என பொருள்படும். எனவே, ஒரு தொகுதியைச் சேர்த்த ராகங்களுக்கு தலைமையான ராகம் ‘மேளகர்த்தா’ என அழைக்கப்டுகிறது. ஏழு ஸ்வரங்களுக்கும் குறைவான ஸ்வரங்களைக் கொண்ட ஒரு தலைமை ராகத்தைச் சேர்த்த ராகங்கள், ஜன்ய ராகங்கள் என அழைக்கப்படும். இவ்வாறு, கர்னாடக இசையில் 72 மேளகர்த்தா ராகங்களும், அதன் கீழ் ஆயிரக்கணக்கான ராகங்களும் உள்ளன. இந்த 72 மேளகர்த்தா முறையினை முதன் முதலில் வடிவமைத்தவர் வேங்கடமகி எனும் வேங்கடேஸ்வர தீட்சிதர் ஆவார்.

    72 மேளகர்த்தவை வடிவமைத்த வேங்கடமகி அவர்கள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர், நாயக்கர் ஆட்சியில் தலைமை மந்திரியாக இருந்த கோவிந்த தீட்சிதரின் மகனாவார். வேங்கடமகி அவர்கள்,  தான் இயற்றிய சதுர் தண்டி பிரகாசிகை  எனும் வடமொழி இசை இலக்கண நூலில், 72 மேளகர்த்தாவின் அமைப்பை விளக்கியுள்ளார். இவரது காலத்திலும், அதற்கு முன்பும் 20 தலைமை ராகங்களே வழக்கில் இருந்துள்ளன. மேலும், இவர்  72 மேள ராகங்களுக்கும் ராக இலக்கண சுலோகங்களையும் இயற்றியுள்ளார்.

    திரு. வேங்கடமஹி அவர்கள் உருவாக்கிய 72 மேளகர்த்தா முறையும், பெயர்களும்  பிற்காலத்தில் பின்பற்றப்பட வில்லை. இந்த முறையைப் பின்பற்றி முத்துசாமி தீட்சிதர் மட்டுமே கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிந்தாச்சார்யார், தான் இயற்றியுள்ள 'சம்க்ரஹ சூடாமணி'  எனும் நூலில், அதனை திருத்தி அமைத்துள்ள மேளகர்த்தா முறையே தற்காலத்தில் பின்பற்றப்படுகிறது.

    72 மேளகர்த்தா முறையை நிர்ணயம் செய்த வேங்கடமஹி காலத்தில் இது  இசையுலகில் புகழ் பெறவில்லை . அவருக்கு 150 ஆண்டுகளுக்கு பின்பு தோன்றி சங்கீத மும்மூர்த்திகளாக விளங்கிய ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள் காலத்திலேயே புகழ் பெற்றது. முத்துஸ்வாமி தீட்சிதர், வேங்கடமஹி சிஷ்ய பரம்பரையைச் சேர்த்தவராதலால் அவரது முறையைப் பின்பற்றியே கீர்த்தனைகளை செய்துள்ளார். தியாகராஜர் அவர்கள் சம்க்ரஹ சூடாமணி நூலில் உள்ள 72 மேளகர்த்தா முறையினைப் பின்பற்றி கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ஸ்ரீ தியாகராஜரின் நீண்ட சிஷ்ய பரம்பரைக் காரணமாக அம்முறையே கர்னாடக இசையுலகில் தற்காலத்தில் நிலைப் பெற்றுள்ளது. எனவே,  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்  கர்னாடக இசையில் ஏற்பட்ட மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் 72 மேளகர்த்தா ராகங்களின் தோற்றமும், சங்கீத மும்மூர்த்திகளின் பங்களிப்புமே காரணமாகும்.

    தற்காலத்தில் பின்பற்றப்படும் மேளகர்த்தா முறையில் அமைந்துள்ள தியாகராஜர் கீர்த்தனைகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே  அதிக புகழ்பெற தொடங்கியது. எனவே, 72 மேளகர்த்தா முறையும் புகழ் பெற்றது. இதனை, இசை மேதை மஹாவைத்திநாதய்யர் காலமாக நாம் கூறலாம். இசை உலகில் முதன்மையான வித்வானாக இருந்த வைத்தியனாத அய்யர், தியாகராஜரின் புதிய கீர்த்தனைகளை, தனது கச்சேரிகளில் அறிமுகப்படுத்தினார்.

மகா வைத்தியநாதய்யர் :

     19 ஆம்  பிற்பகுதியில் வாழ்ந்த முதன்மைப் பெற்ற இசைக்கலைஞர், வையச்சேரி மஹாவைத்தியநாத சிவன்  . இவர் சகோதரர்,   ராமசாமி சிவன் ஆவார். இவர்கள் தமிழ், வடமொழியில்  தேர்ச்சியடைந்தவர்களாகவும், தியாகராஜரின் நேர் சீட பரம்பரையான, மானம்பூச்சாவடி வேங்கட சுப்பையரின் சீடர்களாகவும் இருந்தவர்கள். மகா வைத்தியநாதய்யர் சங்கீத சாஸ்திரங்களையும்,  சம்கிரஹ சூடாமணி எனும் நூலையும் கற்றறிந்தவர்.

    மகா வைத்தியநாத அய்யரின் இளம் வயதில், கல்லிடைக்குறிச்சி மடத்தில் நடைப்பெற்ற குருபூஜை விழாவில், சிவகங்கை பெரிய வைத்யநாதய்யர், சிறிய வைத்யநாதய்யர் முன்னிலையில், மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் அவர்களால், வைத்தியநாத அய்யருக்கு "மஹா" எனும் பட்டம் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் வைத்தியநாதய்யர் சக்ரவாக ராகத்தில் அமைந்த சுகுணமுலே எனும் தியாகராஜ கீர்த்தனையைப் பாடிய பொழுது,  அங்கிருந்த அனைவராலும் அந்த கீர்த்தனத்தையும், சக்கரவாகம் ராககத்தையும் அறியமுடியவில்லை என வைத்யநாதய்யரின் சிஷ்யர் வாசுதேவநல்லூர் சுப்பையா பாகவதர், "இசை உலகில் மகா வைத்தியநாத சிவன்" எனும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

மேலும் "அக்காலம் இம்முறைகளை அறிந்தோரில்லை. மகாவைத்யநாத சிவன் சிறுவயதிலேயே இசை நூல் ஆராய்ச்சியையும் அறிந்தவர். ஆதலால் அவரைத்தவிர வேறு எவருக்கும் இந்த எழுபத்திரெண்டு முறைகள் பற்றிய செய்திகள் எதுவும் தெரியாது. அம்முறைகளெல்லாம் அக்காலத்திய வித்வான்களுக்குப் பழக்கமில்லை."என்றும் குறிப்பிடுகிறார்.

    இதனால், அக்காலத்தில் 72 மேளகர்த்தா முறை ஒரு சிலரைத்தவிர மற்ற இசைக்கலைஞர்களிடம் பழக்கத்தில் இல்லை என அறிய முடிகிறது.

    மேலும், தஞ்சை இரண்டாவது சிவாஜி அரசரின் மாப்பிளை சஹாராம் சாகேப் அவர்கள், அரண்மனையிலிருந்த 72 மேளகர்த்தவையும் விளக்கும் செய்யுள் ஒன்றிற்கு இசையமைப்புச் செய்து அதனை பரப்புதல் வேண்டும் என்று, எண்ணம் கொண்டு பல இசைப்புலவர்கள் மூலமாக முயற்சி செய்தார். யாராலும் இயலவில்லை என்பதையறிந்த சகாராம் சாகேப், மகா வைத்தியநாத அய்யரைக் கேட்டுக் கொள்ள, அவரும் இசையமைத்து,  இசை மேதைகள் கூடிய அவையில் சமஸ்தான வித்துவான் வீணை ஆதி மூர்த்தி அய்யர் தலைமையில் பாடி அரங்கேற்றினார்.

    பிறகு, திருவையாறு பிரணதார்த்திஹரர் சுவாமி மேலே எழுபத்திரெண்டு மேளகர்த்தாவில் ராகமாலிகைச் செய்து சுவாமி சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார். அதற்கு அவரது சகோதரர் ராமசாமி சிவனால்  சிட்டை ஸ்வரம் அமைக்கப்பட்டு மகாவைத்தியநாத அய்யரின் இரண்டாவது குமாரரான விசுவநாத அய்யரால் அச்சிடப்பெற்று நூலாக வெளியிடப்பட்டது.

ஸ்ரீ தியாகராஜரின் சீடப்பரம்பரையாலும், முக்கிய இசைக்கலைஞர்களாலும் 1906 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் உத்சவ ஆராதனை தொடங்கியது  ; அது முதலே அவரது கீர்த்தனைகள் புகழ் பெற்று 72 மேளகர்த்தா முறையும் நிலைப்பெற்றது. 1912 ஆம் வருட உத்சவத்தில் வீணை சபேசய்யர் 72 மேள கார்த்த ராகத்தையும், கனகாங்கி முதல் ஆரம்பித்துப் பாடி பல்லவியையும் ஸ்வரப்ரஸ்தாரத்தையும் பாடி அனைவரையும்  பிரமிக்க செய்தார் .

     மேற்கண்ட செய்தியினால், மகா வைத்தியநாத அய்யர் அவரது காலத்தில் முதன்மை வித்வானாக இருந்ததால், அவரது 72 மேள  ராகமாலிகை மூலமாக, 72 மேளகர்த்தா முறை இசைக்கலைஞர்களிடம் புகழ் பெற்றது என்பதை அறியமுடிகிறது.

Thursday, 8 August 2024

தவில் மேதை திருவிடைமருதூர் டி.வி.வெங்கடேச பிள்ளை

 

 

தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைக்களஞ்சியமும் கூட! ஆம்.  சிற்பம், ஓவியம் இசை, பரதம் மற்றும் இதர கலைகளில் எண்ணற்ற பல வல்லுனர்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது தஞ்சைதான்.  இசைக்கலையில் பல வாக்கேயக்காரர்களும், வல்லுனர்களும் அதிகளவில் தோன்றியது தஞ்சை மண்ணில்தான். செம்மங்குடி, மகாராஜபுரம், திருவாவடுதுறை, நீடாமங்கலம் போன்ற ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட சிற்றூர்களின் பெயர்களே, அந்தந்த சிற்றூர்களில் தோன்றி புகழ் பெற்று விளங்கிய இசைவல்லுனர்களின் பெயரை உலகறியச் செய்யும்.

இத்தகைய சீரும் சிறப்பும் கொண்ட தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த  திருவிடைமருதூரில், இசைப்பாரம்பரியம் கொண்ட  திரு. வேணுகோபால் பிள்ளை திருமதி.சிவகாமி அம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்து, முன்னணி தவில் இசைக்கலைஞராக விளங்கியவர்  "திருவிடைமருதூர் திரு.டி.வி. வெங்கடேசன்" ஆவார். இவரை தமிழ் இசையுலகம் இன்று  போற்றவில்லை என்றாலும், இவரது தவிலிசையை இன்று வரை போற்றாத இசை ரசிகர்களே இல்லை எனலாம். ஆம், புகழ்பெற்ற 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தின் பின்னணியில் தவில் வாசித்தவரும், அதில் இடம்பெறும் தவில் கோர்வைகளை வடிவமைத்தவரும் இவரே ஆவார். இவருடன் இணைந்து தவில் வாசித்த மற்றொரு தவில் கலைஞர், தேவூர் சந்தானம் பிள்ளையாவார்.  

திரு.வெங்கடேசன் அவர்கள், பிரபல நாதஸ்வர மேதைகள் திருவாவடுதுறை திரு. டி. என். ராஜரெத்தினம் பிள்ளை மற்றும் திருவிடைமருதூர் திரு. பி.எ.ஸ். வீருசாமி பிள்ளை ஆகியோருக்கு நெருங்கிய உறவினராவார்.

திரு.டி.என். ராஜரெத்தினம் பிள்ளை அவர்களின் சிறிய தாயாரும், நாதஸ்வர வித்வான் திருமருகல் திரு. நடேச பிள்ளை அவர்களின் சகோதரர் நாதஸ்வரவித்வான் திரு. கதிரேசன் பிள்ளை அவர்களின் மனைவியுமான திருமதி. ரெங்கநாயகி அம்மாள்,  திருவிடைமருதூர் திரு.டி.வி. வெங்கடேசன் அவர்களின் தந்தை திரு.டி.ஜி.வேணுகோபால் பிள்ளை அவர்களின் உடன்பிறந்த மூத்த சகோதரி ஆவார். திருவாடுதுரை திரு டி.என். ராஜரெத்தினம் பிள்ளை அவர்கள் தனது சிறிய தாயார் திருமதி.ரெங்கநாயகி அம்மாள் அவர்களிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.

திருவிடைமருத}ர் திரு.பி.எஸ். வீருசாமிபிள்ளை அவர்களின் தாயார் திருமதி. அபயாம்பாள் அம்மாள் அவர்களும், திருவிடைமருதூர் திரு.டி.வி.வெங்கடேசன் அவர்களது தந்தை வழிப் பாட்டியர் திருமதி.திருநாகவல்லி அம்மாள் அவர்களும் உடன் பிறந்த சகோதரிகள். இச்சகோதரியருக்கு நயினி என்ற மற்றொரு சகோதரியும் இருந்தார்.            

பாரம்பரிய இசைஞானம் கொண்டிருந்த திரு.டி.வி. வெங்கடேசன் தனது இளம் பிராயத்தில் பிரபல தவில் விற்பன்னராக இருந்த திருவாளப்புத்தூர் திரு. பசுபதி பிள்ளை அவர்களிடம் குருகுலம் பயின்றார். 

தனது 10வது வயதுமுதல் பிரபல நாதஸ்வர வித்வான் திருவிடைமருதூர் திரு.பி.எஸ். வீருசாமி பிள்ளை அவர்களின் குழுவில் சுமார் 20 வருட காலத்திற்கும் மேலாக இருந்து, பிரபல நாதஸ்வர மேதைகளான திருவாவடுதுறை திரு.டி.என். ராஜரெத்தினம் பிள்ளை, செம்பனார் கோவில் சகோதரர்கள், திருவாவடுதுறை “கக்காயி” திரு.டி.என். ஆர். நடராஜசுந்தரம் பிள்ளை, குளிக்கரை திரு. எஸ் பிச்சையப்பா பிள்ளை, திருவெண்காடு திரு.டி.பி.சுப்பிரமணியப் பிள்ளை, அம்பலப்புழை சகோதரர்கள்  கே. சங்கரநாராயணப் பணிக்கர் - கே. கோபால கிருஷ்ணப் பணிக்கர, காருகுறிச்சி திரு. பி அருணாசலம்,  நாமகிரிப்பேட்டை திரு.கே. கிருஷ்ணன்,  திருமெஞ்ஞானம் திரு. டி.பி. நடராஜசுந்தரம் பிள்ளை, மதுரை சகோதரர்கள் எம்பி.என். சேதுராமன் எம்.பி.என். பொன்னசாமி, கரவடி திரு.ஷேக் சின்ன மவுலானா  போன்ற அனைத்து முன்னணி நாதஸ்வர வித்வான்களின் இசை நிகழ்ச்சிகளிலும் சிறப்புத் தவிலாக வாசித்துள்ளார்.

பிரபல தவில் வித்வான்களாக திகழ்ந்த  திருக்கடையூர் திரு. சின்னையா பிள்ளை, கூரைநாடு திரு. பழனிவேல் பிள்ளை, நீடாமங்கலம் திரு.என்.டி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாச்சியார்கோவில் திரு.பி.இராகவப்பிள்ளை, திருமுல்லைவாயில் திரு.முத்துவீருபிள்ளை, கும்பகோணம் திரு.கே.ஏ.தங்கவேல் பிள்ளை, கூரைநாடு திரு. கோவிந்தராஜ் பிள்ளை, நீடாமங்கலம் திரு.என்.டி.எம்.சண்முகவடிவேல் பிள்ளை, வலங்கைமான் திரு.ஏ.சண்முகசுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் திரு.வி.தட்சிணாமூர்த்தி பிள்ளை மற்றும் வலையப்பட்டி திரு.ஏஆர். சுப்பிரமணியம் போன்றவர்களால் போற்றிப் பாராட்டி ஏற்றுக் கொள்ளப்பட்டவர் திரு.டி.வி. வெங்கடேசன் ஆவார். தவில் வாசிப்பில், இவரது வித்வத் திறமை இன்றளவும் அனைவராலும் பெரிதும் போற்றி மதிக்கப்படுகிறது.


  1952-ஆம் ஆண்டில், அகில இந்திய வானொலியின் (டெல்லி) அகில பாரத இசை நிகழ்ச்சியில், முதன் முதலாவதாக ஒலிபரப்பப்பட்ட  நாதஸ்வர இசை நிகழ்ச்சியில்,  திருவிடைமருதூர் திரு.பி.எஸ்.வீருசாமிப் பிள்ளை அவர்களோடு “தனித்தவிலாக” பங்கேற்றுள்ளார்.

1973-ஆம் ஆண்டில் நாதஸ்வர வித்வான் டாக்டர்.திரு.ஷேக் சின்னமவுலா அவர்களுடன் அமெரிக்கா கனடா உள்ளிட்ட அமெரிக்க ஐக்கியநாடுகளில் இரண்டு மாத காலம் இசை நிகழ்ச்சிகள் நடத்தியும், அமெரிக்க ஐக்கிய நாட்டு பல்கலைக் கழகத்தில் தவிலின்  சிறப்புகள் குறித்தும்  உரைநிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் இசைநிகழ்ச்சிகள் நடத்திய இரண்டு மாத காலத்தில், அமெரிக்கர் ஒருவருக்கு தவில் பயிற்றவிக்கவும் தவறவில்லை. இவ்வாறு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தவில் மற்றும் அதன் மேன்மை குறித்து அமெரிக்கர்கள் முதன் முதலாக அறியச் செய்தவர், திருவிடைமருதூர் திரு.டி.வி.வெங்கடேசன் அவர்களே ஆவார்

982- ஆம் ஆண்டு  ஆங்காங்கில் நடைப்பெற்ற ஆசிய இசைவிழாவில், டாக்டர்.திரு.ஷேக் சின்னமவுலானா அவர்களின் நாதஸ்வர நிகழ்ச்சியில் பங்கேற்று தவில் வாசித்து, ஆங்காங் மக்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்றவர். அதே ஆண்டில் (1982) முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் நினைவு நாளில், காலஞ்சென்ற பாரதப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி முன்னிலையில் அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்ற திரு. ஷேக்சின்னமவுலானா அவர்களின் நாதஸ்வர நிகழ்ச்சியில் பங்கேற்று தவில் வாசித்து,  திருமதி. இந்திரா காந்தி அவர்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.

மதுரை சகோதரர்கள் திருவாளர்கள் எம்.பி.என்.சேதுராமன் எம்.பி.என்.பொன்னுசாமி அவர்களுடன், “தில்லானா மோகனாம்பாள்” திரைப் படத்தில் இடம்பெற்ற நாதஸ்வர மற்றும் நடன நிகழ்ச்சியின் பின்னணி இசையில்  முழு அளவில் பங்கேற்று சிறப்பாக தவில் வாசித்து, தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரின்பாராட்டுகளைப்பெற்றவர். 
இவர், அபூர்வமான கற்பனைத்திறம் கொண்டவர். இவரது சிறந்த வாசிப்பிற்கும், கற்பனைத்திறத்திற்கும் ஆதாரமாக இப்படத்தின் பாடல்கள் விளங்குகிறது.

இவ்வாறு திருவிடைமருதூர் திரு.டி.வி.வெங்கடேசன் அவர்கன் தனது இளவயது முதல் தமிழகம் மட்டுமல்லாது, டெல்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், மைசூர்,   போன்ற பெருநகரங்களில் உள்ள அனைத்து சபாக்களிலும், பல முன்னணி நாதஸ்வர வித்வான்களின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக தவில் வாசித்து, அனைத்து நாதஸ்வர-தவில் வித்வான்களாலும், பிற இசைக் கலைஞர்களாலும், கர்நாடக இசை ரசிகர்களாலும், அவ்வப்போது பத்திரிக்கை விமரிசகர்களாலும் சிறந்த தவில் வித்வானாக பாராட்டப்பெற்ற ஏராளமான சம்பவங்களைக் கூறலாம். 

உதாரணமாக, நாதஸ்வர வித்வான்கள் எம்.பி.என்.சேதுராமன்-எம்.பி.என்.பொன்னுசாமி சகோதரர்களால் மதுரையில் நடத்தப்பட்ட நாதஸ்வர வித்வான் திரு.எம்.கே.என்.பொன்னுசாமிப் பிள்ளை அவர்களது நினைவு நாள் பட ஊர்வல விழாவில் நடைப்பெற்ற திருமெய்ஞானம் திரு.டி.பி.நடராஜசுந்தரம் பிள்ளை அவர்களின் நாதஸ்வர இசைநிகழ்ச்சியில், பிரபல தவில் வித்வான் யாழ்ப்பாணம் திரு.வி.தட்சிணாமூர்த்தி பிள்ளை அவர்களுடன் இணையாகப் பங்கேற்று சிறப்பாக தவில் வாசித்த திருவிடைமருதூர் திரு.டி.வி.வெங்கடேசன் அவர்கள் தனது தனித்தன்மையைப் பெரிதும் மிளிரச் செய்து, திருவாளர்கள் எம்.பி.என்.சேதுராமன்-எம்.பி.என்.பொன்னுசாமி சகோதரர்கள் நாதஸ்வர வித்வான் திரு.டி.பி.நடராஜசுந்தரம் பிள்ளை தவில் வித்வான் யாழ்ப்பாணம் திரு.வி.தட்சிணாமூர்த்தி பிள்ளை மற்றும் மதுரையைச் சேர்ந்த அனைத்து நாதஸ்வர தவில் வித்வான்களாலும் இதர இசைக்கலைஞர்களாலும் இசைப் பிரியர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க சம்பவங்களுள் ஒன்றாகும்.


இவர், சுமார் 60 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் தவில் ஒரு பக்க வாத்தியம் என்ற வகையில், நாதஸ்வர வித்வான்களுக்குப் பக்குவமாக வாசித்து நிகழ்ச்சிகளைப் பரிமளிக்க செய்யக் கூடியவராகவும்,. வித்வான் என்ற வகையில் தவிற் வாசிப்பில் தனது தனித் திறமையை வெளிப்படுத்தி வித்வத் தன்மையை மிளிரச் செய்யக் கூடியவராகவும் விளங்கினார்.

மிகவும் சாதுவான திருவிடைமருதூர் திரு.டி.வி.வெங்கடேசன் அவர்கள் எந்த விதமான தீய பழக்க வழக்கங்;களுக்கும் அடிமையாகாதவர். அடக்கமே உருவானவர். கதராடைகளைத் தவிர வேறெந்த உடையும் அணியாத மிகப்பெரிய தேசீயவாதி. செய்யும் தொழிலை வர்த்தக ரீதியில் கருதாமல் இறைவனுக்கு உரித்தான கலையாகக் கருதி செயல்பட்டு வாழ்ந்தவர். தனது மூத்த கலைஞர்களுக்கு தக்க வகையில் மதிப்பளிக்கும் உயரிய பண்பாளர். சுயவிளம்பரம் விரும்பாதவர். தனது சுயநல அடிப்படையில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாதவர். நாதஸ்வர வித்வான்கள் சபா செயலாளர்கள் பத்திரிக்கையாளர்கள் இசை விமரிசகர்கள் சக இசைக்கலைஞர்கள் மற்றும் கர்நாடக இசை ரசிகர்கள் மத்தியில் அணுகமுறை மேற்கொள்வதில் மற்ற கலைஞர்களைக் காட்டிலும் பெரிதும் வித்தியாசமாகக் காணப்பட்டாலும் உண்மையில் சிறிதும் கர்வம் இல்லாதவர். தனது மூத்த சக இளைய கலைஞர்கள் மத்திய-மாநில அரசுகள் தமிழ்நாடு இயல்-இசை-நாடகசங்கம் சபாக்கள் மற்றும் இதர அமைப்புகள் மூலம் அவ்வப்போது கவுரவிக்கப்படும் சமயங்களில் பொறாமை ஏதுமின்றி தானும் ஒரு கலைஞர் என்ற முறையில் பெருமைப் படக்கூடியவர்.

தவில் வாசிப்பு மட்டுமின்றி தவில் இசை பயிற்றுவித்தலிலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தவர். தவில் வாசிப்பில் பல கலைஞர்களைப் பக்குவமடையச் செய்துள்ளார். அனேக இளங்கலைஞர்கள  தனதுவாழ்நாளின் இறுதி காலத்திலும் வீட்டிலேயே உணவு உறைவிடம் அளித்து குருகுல முறையில் பயிற்சியளித்து வந்த திரு.டி.வி.வெங்கடேசன் அவர்கள் கடந்த 09.02.2007 அன்று இம்மண்ணுலுகை விட்டுப் பிரிந்தார்

                                                                                நன்றி : திரு. டி.வி.கணேசன் அவர்கள்.