சிலப்பதிகாரம்
உரையின் மூலம் பல பழந்தமிழிசை நூல்களின் பெயர்களை அறிய முடிந்தாலும், அவை இன்று நமக்கு
கிடைக்கவில்லை. இவற்றில் அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட சங்க காலத்தைச் சேர்ந்த பஞ்சமரபு
எனும் பழந்தமிழ் இசை நாட்டிய நூல் நமக்கு கிடைத்துள்ளது.
இந்நூலின்
ஓலைச் சுவடி, வித்துவான் திரு.வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களால் கண்டெடுக்கப்பட்டு,
1973 இல் முதல் பகுதியும், 1975 இல் இரண்டாம் பதிப்பும் வெளியானது.
பஞ்சமரபு
எனும் இசை நூல், கவுண்டர் அவர்களிடம் இருப்பதை அறிந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள்,
இந்நூலைப் பதிப்பக்க வேண்டி, பொருளுதவி செய்து,
தனது சக்தி அறநிலையம் வெளியீடாக வெளியிட்டார்.
இப்பதிப்பின்
உதவிக்காக குடந்தை குடந்தை திரு.இராம.திருநாவுக்கரசு அவர்களின் மூலம் பண்ணாராய்ச்சி
வித்தகர், குடந்தை திரு.ப.சுந்தரேசனார் அவர்களை வரவழைத்தார். சுந்தரேசனார் அவர்களும்
தெய்வசிகாமணி கவுண்டருடன் உடனிருந்து இந்நூலை பதிப்பிற்கு ஏற்றவாறு அமைக்க உதவினார்.
மேலும்,
திருச்செங்கோடு கணபதி குருக்கள், வில்லிபுத்தூர் வித்துவான் கோவிந்த மூப்பனார் இருவரும்
இந்நூலின் பதிப்பிற்கு உதவியாக இருந்தனர்.
திரு.வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள், பஞ்சமரபு போன்ற பல அரிய நூல்களை ஓலைச்சுவடியிலிந்து நூலாகப் பதிப்பித்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'பரத சங்கிரகம்' எனும்
நூலின் சுவடியைத் தந்து உதவியவரும் இவரே!.
மேற்கண்ட
பெரியார்களின் இசைத் தொண்டுகள், தமிழிசை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட
வேண்டியவை.
நூலின்
அமைப்பு:
இசை
மரபு, வாச்சிய மரபு, நிருத்த மரபு, அபிநய மரபு, தாள மரபு எனும் ஐந்து மரபுகளையும் பற்றியும்
இந்நூல் பேசுவதால், பஞ்ச மரபு என்றழைக்கப்படுகிறது. மேலும் தோல், துளை, நரம்பு, கஞ்சம்,
மிடறு எனும் 'பஞ்ச மகா சத்தம்' பற்றியும் விவரிப்பதால் பஞ்சமரபு என்றழைக்கப்படும் என்று,
வகையொழிபு மரபில் கூறப்படுகிறது. எனவே, இந்நூல் பழந்தமிழரின் இசை மற்றும் நாட்டியத்திற்கு
இலக்கணம் கூறும் நூலாக விளங்குகிறது.
தமிழிசை
அறிஞர், திரு.வீ.ப.கா.சுந்தரம் அவர்கள், இந்நூலிற்கு விரிவான விரித்தியுரை எழுதி பதிப்பித்துள்ளார்.
பஞ்சமரபு எனும் இந்நூலில் பிற்காலத்திய இடைச்செருகல்களும் கலந்துள்ளதென்பது அறிஞர்கள்
கருத்தாகும்.
இசை
ஆய்வாளரரும் முன்னால் பேராசிரியருமான திருமதி அங்கயற்கண்ணி அவர்கள், இந்நூலின் இசைமரபை
மட்டும் ஆய்வு செய்து, பஞ்சமரபில் இசைமரபு என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். இந்நூலில்,
பஞ்சமரபின் சில பகுதிகளைத் தவிர மற்றப் பகுதிகள் 9ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்
என்ற ஐயத்தை எழுப்பியுள்ளார்.
பல
நூற்றாண்டுகளாக பல்வேறு படையெடுப்புகளுக்கும், மொழிகளின் ஆதிக்கத்திற்கும் உள்ளான தமிழ்
இசைமரபின் முக்கிய நூலான 'பஞ்சமரபில்' இடைச்செருகல் இருப்பதில் வியப்பில்லை. எப்படி
பார்த்தாலும் இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இந்நூல், தமிழர்களின் இசைக்கான
அடையாளம் என்பதில் ஐயமில்லை.
வீ.பா.க.சுந்தரனார் இயற்றிய பஞ்சமரபு -விருத்தியரையை
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு
மையம் வெளியிட்டுள்ளது. இந்நூல், இன்று கிடைக்கிறது. அனைவரும் வாங்கி, நமது தமிழிசையின்
மரபினை அறிவோம்.
முனைவர்
ப.கோபாலகிருஷ்ணன்





















