Friday, 19 December 2025

‘இசைச் செல்வர்’ திருப்பாம்புரம் என்.சிவசுப்ரமண்ய பிள்ளை


 

திருப்பாம்புரம் எனும் ஊரின் பெயரில் அழைக்கப்படும் மிகப்பெரும் இசைப்பாரம்பரியத்தில், நாகசுர வித்வான் உயர்திரு சுவாமிநாத பிள்ளையின் பேரனாகவும், நாகசுர வித்வான் உயர்திரு நடராஜ சுந்தரம் பிள்ளையின் மூன்றாவது மகனாகவும் 1917 ஆம் ஆண்டுப்  பிறந்தவர் சிவசுப்பிரமண்ய பிள்ளையாவார்.

திருப்பாம்புரம் இசைப் பாரம்பரியத்தின் முன்னோரான சிதம்பரம் அமிர்தகவி அவர்கள், தமிழிசை மூவரில் ஒருவரான முத்துத்தாண்டவரின் உடனிருந்து, அவரது கீர்த்தனைகளைத் தொகுத்தவர். இவரது பரம்பரையில் வந்த உயர்திரு சாமிநாத பிள்ளை, முதல் முதலாக நாகசுரம் கற்று, புகழ் பெற்ற நாகசுரக் கலைஞராக விளங்கினார்.

திருப்பாம்புரம் சாமிநாத பிள்ளை, தனது மகன்கள் நடராஜ சுந்தரம் மற்றும் சிவசுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் நாகசுரம் கற்றுக் கொடுத்து, 'திருப்பாம்புரம் சகோதரர்கள்' என,  இரண்டு நாகசுரமாக இணைந்து வாசிக்கும் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.

நாகசுர வித்வான் சா. நடராஜ சுந்தரம் பிள்ளை, தீக்ஷிதர் கீர்த்தனைகளில் ஐம்பதை, தமிழில் முதன் முதலாக சுர தாளக் குறிப்புடன், 'தீக்ஷிதர் கீர்த்தன பிரகாசிகை' எனும் நூலாக வெளியிட்டுள்ளார். இவருக்கு சுவாமிநாதன், சோமசுந்தரம், சிவசுப்ரமணியம் என்று மூன்று மகன்கள் ஆவர். 





நடராஜ சுந்தரம் பிள்ளை, தனது மகன்களுக்கு நாகசுரம் கற்றுக்கொடுத்ததோடு, தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் போன்றவையும் தனித்தனி ஆசிரியர்களை வீட்டிலேயே அமர்த்தி சொல்லிக்கொடுத்தார்.

தொடக்கத்தில் நாகசுரம் வாசித்த சுவாமிநாத பிள்ளையவர்கள், நாகசுரம் வாசிப்பதை விடுத்து,  புல்லாங்குழலில் நிபுணரானார். பிறகு, சோமசுந்தர பிள்ளையவர்களும்  சிவசுப்பிரமணிய பிள்ளையவர்களும் இணைந்து நாகசுரம் வாசித்தனர். இச்சகோதரர்கள் ஆல் இந்தியா ரேடியோவில் வாசித்துள்ளனர். பிறகு, சிவசுப்ரமணிய பிள்ளை வாய்ப்பாட்டில்  நிபுணர் ஆனார். சோமசுந்தரம் பிள்ளையவர்கள், பழனி இசைக் கல்லூரியில் முதல் நாகசுர ஆசிரியராகவும் பணியாற்றி, பல மாணவர்களை உருவாக்கியுள்ளார்.


(வலமிருந்து இடம்)

திருப்பாம்புரம் உயர்திரு, என்.சுவாமிநாத பிள்ளை

திருப்பாம்புரம் உயர்திரு, என்.சோமசுந்தரம் பிள்ளை

திருப்பாம்புரம் உயர்திரு, என். சிவசுப்பிரமணிய பிள்ளை

சிவசுப்ரமணிய பிள்ளையின் முதல் கச்சேரி, விஷ்ணுபுரம் அக்ரஹாரத்தில் பெரிய வீடு அய்யர் என அழைக்கப்படும் இல்லத்தில் நடைப்பெற்றது. வாய்ப்பாட்டுக் கலைஞராக புகழ் பெற்ற திருப்பாம்புரம் சிவசுப்பிரமணிய பிள்ளை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1942 முதல் 1977 வரை குரலிசை விரிவுரையாளராகவும், இசைத்துறை தலைவராகவும் பணியாற்றினார்.

இவர், சொந்தமாகப் பாடல்களை இயற்றியுள்ளார். மேலும், பாடல்களுக்கு சுர தாள குறிப்பு எழுதுவதில் திறமைப் பெற்றிருந்தார். இவர் தந்தை நடராஜசுந்தரம் பிள்ளையின் 'தீக்ஷிதர் கீர்த்தன ப்ரகாசிகை' நூலின் பதிப்புப் பணியில், இவரது பங்களிப்பு முக்கியமானதாகும். மேலும், இவரது மூத்த சகோதரர் சுவாமிநாத பிள்ளை இசையமைத்த  முத்துத்தாண்டவர் மற்றும் மாரிமுத்தா பிள்ளையின்  கீர்த்தனைகள், எம்.எம்.தண்டபாணி தேசிகர் இயற்றிய பாடல்கள் போன்றவற்றில், சிவசுப்ரமணிய பிள்ளையின் சுர தாள குறிப்பின் சிறப்பினைக் காணலாம்.




அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழிசை வெளியீடுகளில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கதாகும். இவர் சுர தாள குறிப்பு எழுதியுள்ள பாடல்கள், அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும், தெளிவானதாகவும் அமைந்திருப்பதோடு, அவற்றின் அச்சுப் பிரதியில் தவறு ஏதும் இல்லாதவாறு சரிபார்த்து,  அவற்றினைப் பதிப்பித்துள்ளார். எனவே, தமிழிசையின் வளர்ச்சியில் இவரது பங்களிப்பு எக்காலத்திலும் போற்றுதலுக்குரியதாகும்.

விருது மற்றும் பட்டங்கள்

"இசைச் செல்வர்" (கோல்டு மெடல்) எனும் பட்டம் 1940 ஆம் ஆண்டு எழும்பூர், ஸ்ரீனிவாச பெருமாள் தேவஸ்தானத்தில் வழங்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு, 55 வது இசை மாநாட்டில் (மியூசிக் அகாடமி) மூத்த குரலிசைக் கலைஞருக்கான "யோகம் நாகசாமி நினைவு விருது வழங்கப்பட்டது.

 


தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் 1975 - 1976 ஆம் ஆண்டுக்கான   “கலைமாமணி” விருது வழங்கப்பட்டது.

மியூசிக் அகாடமியில் பலமுறை குரலிசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். மேலும் மியூசிக் அகாடமியில், 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற இசை மாநாட்டில், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் திருவாரூர் பஞ்சலிங்கக் கீர்தனைகளைப் பற்றி விரிவுரை வழங்கியுள்ளார்.





‘இசைச் செல்வர்’ என்.சிவசுப்ரமண்ய பிள்ளை பாடிய  குரலிசையின் பதிவு, இணையத்தில் கிடைக்கிறது(நாதப்ருங்கா யூ டுயூப்). அவற்றைக் கேட்கும் போது, அவரது இசையின் சிறப்பையும்  உயர்வையும் அனைவரும் அறிய முடியும். நாதபிருங்காவின் இந்தப் பணி, போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரியதாகும்.



சிவசுப்ரமண்ய பிள்ளை, நாகசுரம் மற்றும் வாய்ப்பாட்டுத் தவிர புல்லாங்குழலும் வாசித்துள்ளார். ஒருமுறை, ஆல் இந்தியா ரேடியோவில், கே.சி.தியாகராஜன் ஒருங்கிணைத்த  "திருப்பாம்புரம் பாரம்பரியம்" எனும் நிகழ்ச்சியில் புல்லாங்குழல் வாசித்துள்ளார்.




இஞ்சிக்குடி சுப்ரமணிய நாயனக்காரரின் மகளும், நாகசுர வித்வான் இஞ்சிக்குடி முத்துக்குமாரசுவாமியின் தங்கையுமாகிய காமாட்சி அவர்களை மணந்த சிவசுப்பிரமணிய பிள்ளைக்கு, இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இவரது மகன் டி.எஸ்.திருநாவுக்கரசு அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று, சென்னை தமிழிசைக் கல்லூரியில், குரலிசை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.


    திருப்பாம்புரம் எனும் உயரிய இசைப்பாரம்பரியத்தில் தோன்றி, அதன் சிறப்பையும் மரபையும் காப்பாற்றும் விதமாக, இலக்கணம் மற்றும் மரபு வழுவாத மூத்த இசைக்கலைஞராகவும், பல மாணவர்களை உருவாக்கிய ஆசிரியராகவும் விளங்கிய சிவசுப்பிரமணிய பிள்ளையவர்கள், 1981 ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்தில் சிதம்பரம் நடராஜரின் பாதத்தில் ஒன்றெனக் கலந்துவிட்டார். தமிழிசைக்கு இவர் ஆற்றியுள்ள தொண்டுகள் காலத்தால் அழியாது, என்றும் தமிழிசையைக் காத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

நன்றி : திருச்சேறை டி.வி.எஸ்.எஸ்.ரகுவீரன் சிவசுப்ரமணியம் அவர்கள்.

நன்றி:  நாதபிருங்கா யூடூப் சேனல்

குறிப்பு நூல் : தமிழிசை நுணுக்கம் (திருப்பாம்புரம் எஸ்.சண்முகசுந்தரம்)

 

 


No comments:

Post a Comment