ஜாதி,
மதம் தாண்டிய நல்லிணக்கத்திற்கு அடையாளமாக
விளங்குவது இசை ஒன்றேயாகும். இத்தகைய மத நல்லிணக்கத்தை இசை மூலம் பறைசாற்ற தோன்றிய
உன்னத இசைக்கலைஞர், திரு. ஷேக் சின்ன மௌலானா ஆவார்.
இவர்,
ஆந்திராவின் (கரவடி) பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் 1924 ஆம் ஆண்டு, மே 12 இல் தோன்றியவர்.
பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் சிலுக்கலூரிப்பேட்டை என்னும் இடத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற
நாகசுரக் கலைஞர் ஷேக் ஆதம் சாஹிப் அவர்களிடமும் பயிற்சிப் பெற்றார்.
சிறுவயதிலேயே
நாகசுர சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டு பிரமித்த இவர், தஞ்சாவூர்
பாணியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் தமிழகம் வந்து, நாகசுர மேதை நாச்சியார்கோவில்
துரைக்கண்ணு பிள்ளையிடம் குருகுலம் மேற்கொண்டார். தனது கடின உழைப்பின் மூலம் மேன்மையான நாகசுரக் கலைஞராக உருவானார். 1970 ஆம் ஆண்டில் அவர்
கொடுத்துள்ள கொலம்பியா இசைத்தட்டில், திருவாடுதுறையாரின் பிரதிபலிப்பைக் காண முடியும்.
அதில் வாசித்துள்ள ‘ஜானகி ரமணாவும்’, ‘வள்ளிநாயகனும்’, ராஜரெத்தினம் பிள்ளையே மௌலானா
உருவில் வாசித்துள்ளதாக எண்ணும்படி, மெய்ச்
சிலிர்க்க வைப்பவை. சண்முகப்ரியா ராக ஆலாபனையில் மௌலானா அவர்கள் வாசித்துள்ள துரிதகாலப் பிருக்காக்களும், வக்ர சங்கதிகளும்
அவரது கடின உழைப்பிற்குச் சான்றாகத் திகழ்கின்றன.
நாகசுரத்தில்
தனக்கென்ற தனிப் பாணியைத் தோற்றுவித்து, ரசிகர்களுக்கு நாத இன்பத்தை வழங்கிய இவரின்
நாகசுர பாணியின் சிறப்பாக ‘ஒத்து மூச்சை’ கூறலாம். நாகசுரத்தில் மூச்சைக்
கட்டுப்படுத்தி வாசிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனாலேயே இது, ராஜ வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. தனது
கடுமையான பயிற்சியின் மூலம் அதை சாதித்துக் காட்டிய மௌலானா அவர்கள், ராக ஆலாபனையில்
சங்கதிகள் துண்டு துண்டாக இல்லாமல், தொடர்ந்து நீண்ட நேரம் சங்கிலித் தொடராக வாசிப்பதில்
வல்லவராகத் திகழ்ந்தார். மேலும்,
ராக மூர்ச்சனைகளின் அழகு நன்கு வெளிப்படும்படி, சம்வாதி (முடிவு) சுரத்தில் அதிக கார்வைக்
கொடுத்து நின்று வாசிப்பதும் இவரது பாணியின் சிறப்பாகும்.
சாகித்ய
சுத்தம், முழுமையான அகாரம், பிசிறு இல்லாத
தெளிவு, சுருதி சுத்தம், காலப்ரமாணம், நீண்ட
நேர ப்ருகாக்கள் போன்றவை இவரது வாசிப்பின் சிறப்புகளாகும். காம்போதி ராகத்தில் வாசித்துள்ள "ஓ ரங்க சாயி"
என்ற கீர்த்தனைப் பதிவு,
இவரின் சாகித்ய ஞானத்திற்கும், அகார சுத்தத்திற்கும்
சான்றாகத் திகழ்கின்றது. இந்த
செளக்யமு - காபி ராக பதிவில், ராக ஆலாபனையின் முடிவில் 'தன்னகாரம்' (மெல்லியதாக) ஆக, காபி ராகத்தின் சுரங்களைச் சுருதியோடு
இழைத்து, மனதை வசீகரப்படுத்துமாறு வாசித்துள்ள
பாங்கு மிகவும் சிறப்பானதாகும்.
பொதுவாக
ராக ஆலாபனையின் இடையே ப்ருக்காக்கள் வாசிப்பதே
வழக்கமாகும். ஆனால், மௌலானா அவர்கள் கீர்த்தனையிலேயே சங்கதிகளுக்கு இடையில், பதச் சேதம் இல்லாமல், தாளத்தின்
காலப்பிரமானம் மாறாமல் ப்ருக்காக்களைப் பொழிவதில் வல்லவராகத் திகழ்ந்தார். நகுமோமு(ஆபேரி)
கீர்த்தனையின் இசைப் பதிவில், சரணத்தில் இவர் வாசித்துள்ள ப்ருக்காக்கள் மெய் சிலிர்க்க
வைப்பவை.
இவ்வாறான
இசை நுணுக்கங்கள் அனைத்தையும் தனது வாசிப்பில் வெளிப்படுத்தி, வருங்கால இசைக்கலைஞர்களுக்கு
நாகசுரத் துறையின் சிறந்த முன்னோடியாகத் திகழும் சங்கீதக்
கலாநிதி சின்ன மௌலானா அவர்கள், தென்னிந்திய
நாகசுர மரபில், சிறந்த நாகசுர மேதைகளின் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் ஆவார்.
இவர் ஆந்திராவில் பிறந்திருந்தாலும், திருச்சி - திருவரங்கத்தில் வாழ்ந்து தஞ்சாவூர் பாணியை வளர்த்த, திரு. சின்ன மௌலானா அவர்களுக்கு உலகமெங்கும் தற்பொழுது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தருவதாகும்.
சண்முகானந்தா
பைன் ஆர்ட்ஸ் @ சங்கீத சபா வெளியிடும் காலாண்டிதழில், பத்ம ஸ்ரீ ஷேக் மௌலானா சாஹேப்
அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு வெளிவந்த
சிறப்பிதழில்(ஏப்ரல் -ஜூன் 2024), இடம்பெற்ற என்னுடைய கட்டுரை.
No comments:
Post a Comment