மதுரை நாகசுர மேதை எம். பொன்னுச்சாமி பிள்ளை
'
இன்றைய
இந்நூலின், ஐந்தாவது பாகமான 'இசை நுணுக்கமென்னும்
'
இன்றைய
இந்நூலின், ஐந்தாவது பாகமான 'இசை நுணுக்கமென்னும்
வரலாறு
என்பது நிகழ்வுகளின் தொகுப்புதானே! ஆனால், அந்நிகழ்வுகள் எல்லாம் பேசப்படுகிறதா?
சிறப்பு வாய்ந்த சில நிகழ்வுகளே பேசப்படுகின்றன. அதிலும், சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள்
எல்லாம் கொண்டாடப்படுவதில்லை. அதற்கு பின்புலம், ஆதரவாளர்கள் தேவை. அது இல்லாத போது
காலப்போக்கில் அது, மறக்கப்படுகிறது. மீண்டும் அதை நினைவுக் கூறும் கடமை, ஒரு ஆய்வாளருக்குத்தானே
உள்ளது!
'சங்கீத தாள ராக மாலை' எனும் இசை நூலின் அரங்கேற்றம்
'சங்கீத தாள ராக மாலை' எனும் இசை நூல், சென்னையைச் சேர்ந்த ஆவடி எம்.ஜி.குப்புசாமி பிள்ளை எனும் நாகசுரக் கலைஞரால் இயற்றப்பட்டதாகும். இந்நூலின் அரங்கேற்ற விழா, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக நடந்துள்ளது.
இந்நூல்
மறுபதிப்பு செய்யப்படாததாலும், கிடைப்பது அரிதாக இருப்பதாலும் இன்று பலரால் அறியப்படவில்லை.
ஆனால், அன்று இந்த நூல் பலராலும் போற்றப்பட்டது என்பதை, இந்நூலின் அரங்கேற்ற நிகழ்வினைக்
கொண்டே தெரிந்து கொள்ளலாம்.
தஞ்சை
சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் ஞாபகார்த்தமாய் நடந்த (17.2.1965) சங்கீத மகால் திறப்பு
விழாவில், சங்கீத ரத்னாகர, சங்கீதக் கலாநிதி அரியக்குடி அவர்கள் தலைமையேற்க, ‘சங்கீத
தாள ராக மாலை’ அரங்கேற்றம் செய்யப்பட்டது, சிறப்பு வாய்ந்த வரலாற்று நிகழ்வாகும்.
அரியக்குடி திரு.டி.இராமாநுஜ அய்யங்கார் தலைமையில், அறநிலைய பாதுகாப்பாளர் திரு.எம்.எஸ்.சாரங்கபாணி முதலியார் துவக்கி வைத்த விழாவில், பல புகழ்ப் பெற்ற இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி, ஆவடி மேட்டுப்பாளையம் திரு. எம்.ஜி.குப்புசாமி அவர்களால் இயற்றப்பட்ட சங்கீத தாள ராக மாலை நூலுடன் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இந்த
அரங்கேற்ற நிகழ்விற்கு மற்றுமொரு ஆகப் பெரும் சிறப்பு உள்ளது. அது என்னவென்றால், இந்த
ஊர்வலத்திற்கு நாகசுரம் வாசித்தவர், நாகசுர மேதை அய்யம்பேட்டை வேணுகோபால பிள்ளை ஆவார்.
புரொபஸர்
திரு.வி.இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்நூலை வெளியிட்டார். இசைக்கலைஞர்கள் யாவரும் இந்நூலையும்,
ஆசிரியரையும் பாராட்டிப் பேசினர். இயக்குனர்
கே.சுப்பிரமணியம் அவர்களால் அளிக்கப்பட்ட பொன்னாடையை அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்,
குப்புசாமி அவர்களுக்கு அணிவித்து, போற்றி
புகழ் மாலைச் சூட்டினார்.
மற்றொரு
சுவையான செய்தி, இந்நூலின் உருவாக்கத்திற்காக மதுரை பொன்னுத்தாயி மற்றும் நாகசுர மேதை திருவெண்காடு டி.பி.சுப்பிரமணியம் அவர்கள் இசை நிகழ்ச்சி
செய்து தலா 300 ரூபாய் பொருளதவி செய்துள்ளதும்
குறிப்பிடத்தக்கது.
இசை
வரலாற்றில் ஒரு நாகசுரக் கலைஞரின் இசை நூல்,
அந்நூலாசிரியராலேயே அரங்கேற்றம் கண்டது, இதுவே
முதன் முதலாகும் என்றால் அது மிகையாகாது!
மிகச் சிறந்த தவிலிசைக் கலைஞர் பொறையார் வேணுகோபால் பிள்ளை
அவர்கள், சாகித்ய கர்த்தாவாகத் திகழ்ந்தவர். இவர், அம்மாசத்திரம் கண்ணுச்சாமி பிள்ளை,
மலைக்கோட்டை பஞ்சாமி பிள்ளை போன்றவர்களின் வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டியவர்.
இவர்களின் முதன்மையான பணி தவில் வாசிப்பதாக இருந்தாலும், இசையில் ஆர்வம் கொண்டு பாடல்
இயற்றும் வாக்கேயக்காரராக, மற்ற தவில் வித்வான்களிடையே விதிவிலக்காக விளங்கியவர்கள்.
பெற்றோர்கள் :
திரு வேணுகோபால் பிள்ளை அவர்கள், 20.12.1917 ஆம் அன்று, தவில்
வித்வான் ராசப்பா பிள்ளை அவர்களுக்கு, திருமதி குஞ்சம்மாள் அவர்களுக்கும் மகனாக திருக்கடையூரில்
பிறந்தார்.1 எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்ற இவர், மேற்கொண்டு
பள்ளிப் படிப்பைத் தொடராமல், தனது தந்தையின் தொழிலான தவில் வாசிப்பதில் ஆர்வம் கொண்டார்.
குருகுலம்
தன் மகனின் ஆர்வத்தினை அறிந்த ராசப்பா பிள்ளை, தாய் வழி பாட்டனாரான
தில்லையாடி கிடிகிட்டி ஸ்ரீனிவாச பிள்ளையிடம் குருகுல வாசத்தினை தொடக்கி வைத்தார்.
ஸ்ரீனிவாசப் பிள்ளை தவில் வாசிப்பதில் சிறந்து விளங்கினாலும், கிடிகிட்டி வாத்தியத்தினைத்
தவிலுக்கு இணையாகப் பயன்படுத்தி அக்கருவிக்குச் சிறப்பினை உண்டாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீனிவாச பிள்ளை சிறிய பாடல்களையும், கவிதைகளையும் எழுதுவதில் வல்லவர்.2 அவரிடமிருந்தே வேணுகோபால் பிள்ளைக்கும் பாடல்கள் இயற்றுவதில்
ஆர்வம் ஏற்பட்டிருக்க வேண்டும். வேணுகோபால் பிள்ளையின் 15 வது வயதில் ஸ்ரீனிவாச பிள்ளை இறந்து விடவே, மேற்படி தவில்
பயிற்சியைத் திருவாளப்புத்தூர் பசுபதியாப் பிள்ளையிடமும், தனது மாமா திருக்கடையூர்
சின்னையா பிள்ளையிடமும், கூறைநாடு பழனிவேல் பிள்ளையின் தந்தையார் பக்கிரி பிள்ளை அவர்களிடமும்
கற்றுத் தேர்ந்தார்.
தவில் பாணி
பொறையார் வேணுகோபால் பிள்ளை, பல முன்னணி நாகசுரக் கலைஞர்களுக்குத்
தனித்தவிலாக வாசித்து புகழ்ப் பெற்றார். திருச்சேறை நாகசுரக் கலைஞர் டி.வி.எஸ். சிவசுப்ரமணியம்
அவர்களின் குழுவில், 9 ஆண்டு காலம் தவில் வாசித்துள்ள
இவர், சிவசுப்ரமணியம் பிள்ளையின் குடும்பத்தில் ஒருவராகவும் நெருங்கிய நண்பராகவும்
இருந்துள்ளார்.3
நாகசுர மேதை திருச்சேறை டி.வி.எஸ்.சிவசுப்ரமணியப் பிள்ளை
அவர்களுடன் பொறையார் வேணுகோபால் பிள்ளை (வலது புறம் தவில் வாசிப்பது ), புகைப்பட உதவி
: திரு. ரகுவீரன் சிவசுப்பிரமணியம் அவர்கள்.
வேணுகோபால் பிள்ளை, சொந்தமாக நடை, கோர்வைகளை தயாரித்து வாசிக்கக்
கூடியவர். இவர் வாசிக்கும் கோர்வைகளும், நடைகளும் கணக்குகள் நிறைந்ததாகவும், தனி பாணியிலும்
அமைந்திருக்கும் சிறப்புகள் கொண்டது. இவர் வலந்தலையில் வாசிக்கும் பொழுது, தனது கட்டை
விரலிலும் கூடு அணிவது வழக்கமாகும். இவ்வாறு, தவில் வாசிப்பில் தனக்கென்ற தனியான பாணியை
வகுத்துக்கொண்டவர்.
குடும்பம்
வேணுகோபால் பிள்ளை தனது 28 வது வயதில், காரைக்காலைச் சேர்ந்த
மாரிமுத்து என்பவரை மணந்தார். இவர்களுக்கு, குமார் என்ற மகன் பிறந்தார். தனது 47 வது
வயதில் தையல்நாயகி என்பவரை மணந்தார். இவர்களுக்கு, வள்ளி, லெட்சுமி, சண்முக வடிவு,
ஞானாம்பிகா என்ற நான்கு பெண் குழந்தைகளும், கருணாநிதி, குருநாதன் என்ற இரண்டு ஆண் குழந்தைகளும்
பிறந்தனர்.4 வேணுகோபால் பிள்ளை அனைவரிடத்திலும்
அன்பாகப் பழகுபவராகவும், எளிமையாகவும் வாழ்ந்தார். ஒரு தேனியைப் போல், எந்நேரமும் சுறுசுறுப்பாகப் புதியனவற்றை சிந்திப்பதும், பாடல்கள் இயற்றுவதும்
இவரது இயல்பாக இருந்தது.
தவில் பொறியாளர்
தவில் இசைக்கருவியில், மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து,
அதன் வளர்ச்சிக்கு காரணமானவர், வேணுகோபால் பிள்ளையே ஆவார். ஒரு காலத்தில், உடல் வலிமை
பொருந்தியவர்களே தவில் கற்றுக்கொள்ள முன் வந்தனர். ஏனென்றால், தவில், எருமையின் தோல்
வார்களால் இழுத்துக் கட்டப்பட்டது. அதனை எளிதாக வடிவமைத்து, அனைவரும் பயன்படுத்தும்படி
எளிமைப்படுத்தியது வேணுகோபால் அவர்களே. இவர், தோல் வார்களுக்குப் பதிலாக பல்வேறு சோதனைகளுக்குப்
பின் இரும்பு பட்டைகளைப் பொருத்தி, திருகாணிகளைக் கொண்டு முறுக்கேற்றும் வகையில் வடிவமைத்தார்.
இதனால் தோலின் இழுவிசையை எளிதாக அதிகமாக்க முடிந்தது. வலந்தலை எனும் தட்டின் ஒலியும்
அதிகரித்தது. இருபதாம் ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்த மாற்றம் தவிலின்
வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதற்காக, வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்ரமணியம் அவர்கள் முக்கிய இசைக்கலைஞர்களை ஒன்று
கூட்டி, வேணுகோபால் பிள்ளையின் கண்டுபிடிப்பைப் பாராட்டிப் பணமுடிப்பு அளித்தார்.

இசைப்படைப்புகள்
லய வாத்தியங்களை வாசிப்பவர்கள், இராகங்கள் மற்றும் கீர்த்தனைகள்
தொடர்பாக அதிகம் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், வேணுகோபால் பிள்ளை ராகங்கள் மற்றும்
கீர்த்தனைகளில் அதிகம் ஞானமும், ஆர்வமும் கொண்டவராக இருந்தார். இவர் தனியாகப் பாட்டுக்கச்சேரிகளும்
செய்துள்ளார்.
மேலும் இவர், 70 க்கும் மேற்பட்ட பல பாடல்களையும் புதிதாக இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பாடல்களில் பல, இவரது
காலத்திலேயே நாகசுரக் கலைஞர்களால் வாசிக்கப்பட்டுப் புகழ் பெற்ற பாடல்களாகும். ஆனந்த
பைரவி ராகத்தில் அமைந்த 'காணாத காட்சி கண்டேன் நித்திரையில்' எனும் பாடல், நாகசுரக்
கலைஞர்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றதாகும். சாவித்ரி, மனஸாநந்தி போன்ற புதிய ராகங்களிலும்
பாடல்களை இயற்றியுள்ளார். மேலும், புதிய மல்லாரிகள் பலவற்றை இயற்றியுள்ளார். இவர் இயற்றியுள்ள பாடல்களில் பெரும்பாலானவை முறையான
பாதுகாப்புச் செய்யப்படாததால் கிடைக்கப் பெறவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.
அறியப்படும் பாடல்களின் விபரங்கள் பின்வருமாறு,
|
வ.எண் |
பாடல் |
இராகம் |
தாளம் |
|
1. |
காணாத காட்சி கண்டேன் |
ஆனந்த பைரவி |
ஆதி |
|
2. |
ஆட்டம் என்ன சொல்வேனடி வசந்தா |
வசந்தா |
ஆதி |
|
3. |
மறவா மனம் தருவாய் |
தேஷ் |
ஆதி |
|
4. |
பாடல் கேட்குதய்யா |
சாவித்ரி |
ஆதி |
|
5. |
சரஜீ ஸ்ரீரமணி |
யமுனா
கல்யாணி |
|
|
6. |
காப்பது உன் பாரம் அன்றோ |
ஹேமவதி |
ஆதி |
|
7. |
உன்னேயே காதலித்தேன் |
ஹிந்தோளம் |
ஆதி |
|
8. |
கல்லை கடவுளாய் கண்ட |
மனஸாநந்தி |
திஸ்ரம் |
மனசானந்தி ராக கீர்த்தனை :
வேணுகோபால் பிள்ளையின் கீர்த்தனைகளில், பெரும்பாலானவை சிதம்பரம்
நடராஜர் மீது பாடப்பட்டதாகும். இவர் விதி விலக்காக, கடவுள் இல்லை என்ற பொருளில் ஒரு
கீர்த்தனையும் செய்துள்ளது அறியமுடிகிறது. வேணுகோபால் பிள்ளை, ஆரம்ப காலத்தில் திராவிட கட்சியில் தொண்டராக இருந்தார். முன்னாள்
முதல்வர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் போன்றவர்களோடு ஆரம்ப கால நண்பராக பழகியவர்.
ஒரு முறை திராவிட கட்சி பொதுக் கூட்டத்தில்,
கடவுள் இல்லை எனும் பொருளில் பாடல் ஒன்று பாட வேண்டுமாய், பேராசிரியர் அவர்கள் வேணுகோபால்
பிள்ளையிடம் கேட்டுக்கொண்டார். வேணுகோபால்
பிள்ளையும் 'கல்லை கடவுளாய் கண்ட காலமும் போச்சே' என்ற பாடலை மனஸானந்தி ராகத்தில் இயற்றிப்,
பொதுக் கூட்ட மேடையிலும் பாடினார். அவ்வாறு பாடும் பொழுது, கற்கள் வந்து மேடையில் விழுந்த
கதை, அந்த கால கலைஞர்களிடம் புகழ் பெற்றதாகும்.
மனசானந்தி ராகம், வேணுகோபால் பிள்ளை உருவாக்கிய ராகமாகும். இந்த ராகம், அம்சானந்தி
ராகத்தின் ச ரி க ம த நி ச் , ச் நி த ம க ரி ச எனும் அதே சுரங்களைக் கொண்டு, அதற்கு
நேர் எதிரான சுரத்தானங்களை
உடைய சண்முகப்பிரியாவில் ஜன்யமாகும். இந்த ராகத்தின் விளக்கத்தைப்
பற்றி நாகசுரக் கலைஞர் சேங்காலிபுரம் எஸ்.கணேசப்
பிள்ளை, வேணுகோபால் பிள்ளையிடம் கேட்ட போது, "அம்சானந்தியை தலை கீழாக திருப்பி
போட்டால் மனசானந்தி" என்று வேடிக்கையாகக் கூறினாராம்.5 இந்த பாடல், தற்பொழுது
கிடைக்கவில்லை என்பதும் வருந்தத்தக்கதாகும்.
பொறையார் வேணுகோபால் பிள்ளை தன்னை ஒரு தவில் கலைஞராக நிலைநிறுத்திக்
கொண்டாலும், மிருதங்கம், நாகசுரம் போன்ற மற்ற இசைக்கருவிகளிலும் திறமைப் பெற்றிருந்தார்.
அவற்றில் மாணவர்களையும் உருவாக்கியுள்ளார். இவ்வாறு தவில், நாகசுரம், வாய்ப்பட்டு,
மிருதங்கம், வாக்கேயக்காரர் என ஐந்து கலைகளிலும் திறமைப்பெற்ற இசை மேதையாக திகழ்ந்த
இவர், 20.08.2016 அன்று தனது 98 வது வயதில் இறைவனடிச் சேர்ந்தார். பொறையார் வேணுகோபால்
பிள்ளை இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும், நாகசுரம்- தவில் கலையின் புகழ் வானில், மறையாத
நட்சத்திரமாக என்றும் திகழ்வார்.
அடிக்குறிப்புகள்
1. “பொறையார் திரு.ரா.வேணுகோபால்
பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறும்,
இசைப்பணிகளும்
ஓர் ஆய்வு” - செ.இராஜேஸ்வரி, (ஆய்வியல் நிறைஞர் பட்ட
ஆய்வேடு)
2. . பி.எம்.சுந்தரம், மங்கல இசை மன்னர்கள், ப.337
3. பொறையார் வேணுகோபால்
பிள்ளையுடன் நேர்காணல் : நாதஸ்வர இசைப்பிரியன்,
நாள்
28.09.2013 ( https://youtu.be/nxoXzuGtcHE?si=o2t5t3YfUFykzn1c )
4. பொறையார் திரு.ரா.வேணுகோபால் பிள்ளை அவர்களின் வாழ்க்கை
வரலாறும்,
இசைப்பணிகளும்
ஓர் ஆய்வு - செ.இராஜேஸ்வரி ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு.
5. தகவலாளர்: எஸ்.கணேச பிள்ளை(நாகசுர கலைஞர்)சேங்காலிபுரம்,
நாள் 04.04.2021
நாகசுரமா? நாதசுரமா ?
நாகசுரம் எனும் பெயரே பொருத்தமான பழைய பெயர் என்று, ஆய்வாளர்களால் ஒருமித்த கருத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி அவர்கள் தனது தென்னிந்திய இசை அகராதியில், நாகசுரம் என்ற பெயரே சரியென்றும், நாதஸ்வரம் என்று சொல்கிற வழக்கம் 1930 தொடக்கம் தான் வழக்கத்திற்கு வந்தது என்று கூறியுள்ளார். பேராசிரியர் ராகவன், ம்யூசிக் அகாடமி மலர்க் கட்டுரையொன்றில், நாதசுரம் என்ற சொல் பொருள் ரீதியில் இவ்வாத்தியத்திற்கு பொருந்தாது என தெரிவித்துள்ளார்.
16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த இரத்தின கிரி உலா, 17 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது போன்ற சிற்றிலக்கியங்களில், நாகசுரம் என்றே
குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்கால இசை நூல்களான, பரத சங்கிரகம் (16 ஆம் நூற்றாண்டு),
நடனாதி வாத்திய ரஞ்சனம், பரத சேனாபதியம் முதலிய
நூல்களில் நாகசுரம் என்றே கூறப்பட்டுள்ளது. சங்கீத பாரிஜாதம், ஸ்கந்த புராணம் போன்ற வடமொழி நூல்களில் நாகஸ்வரம்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டி கவசத்தில்
"உருத்திர வீணை நாகசுர மேளம் தித்திமி" என்று தேவர்களாட என்று வருகிறது.
மேலும், மற்ற தென்னிந்திய மொழிகளில் அமைந்துள்ள இலக்கியங்களில் நாகஸ்வரம், நாகசாரம்,
நாகச்சின்னம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. எனவே, நாகசுரம் என்பதே பழமையான பெயர் என
அறிய முடிகிறது.
நாகசுரம் என்று பெயர் வந்ததிற்கான பொதுவான காரணமாக
சில ஆய்வாளர்களால் கூறப்படுவது, தமிழகத்தில் வாழ்ந்த நாகர்கள் எனும் ஆதி குடியினரால்
கண்டுபிடிக்கப்பட்டதால் இது நாகசுரம் என்று அழைக்கப்பட்டதென்றும், நாகத்தை ஆட்டும்
நாகர்கள் மகுடி வாசித்தது போலவே, அதையொத்தக் கருவியையும் நாக என்ற முன்னொட்டு கொடுத்து
அழைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
இலக்கியங்களிலும், மற்ற சான்றுகளிலும் 500 ஆண்டுகளுக்கு முன்புதான் நாகசுரம் எனும் பெயர்க் காணப்படுவதால், நாகர் என்பவர்களிடமிருந்து நாகசுரம் எனப்பெயர் வந்தது என்பது, பொருந்தாத விளக்கமாக அமைகிறது. அதோடு, அதற்கு தகுந்த சான்றும் கிடைக்கப்பெறவில்லை.
நாகசுரமே
சரியான பெயரென்று சில அறிஞர்களால் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களும் குறிப்பிடத்தக்கதாக
அமைந்துள்ளது.
தமிழறிஞர் மு.அருணாச்சலம் அவர்களின்
கருத்து :
மு.
அருணாச்சலம் அவர்கள் தனது 'தமிழ் இசை இலக்கண வரலாறு ' எனும் நூலில், புன்னை மரத்தின்
வகையாகிய நாகம் எனும் பெயர் கொண்ட சுர புன்னை
மரத்தில் ஆதியில் இக்கருவி செய்யப்பட்டதால், நாகசுரம் என அழைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
புன்னைக்கும் புன்னாகம் என்ற பெயர் உண்டு. மேலும் அவர், "ஒரு கால் புன்னையின்
வகையான இது இசை வாசிப்பதற்கும், பொருத்தத்தமான இசைக்கருவி செய்வதற்கும் பயன்பட்டமையால்
இது, சுர புன்னை என்று பெயர் பெற்றது என்றும்
கருதலாம். நாகசுர மரம் என்றும் இதைச் சொல்வதுண்டு". என்றும் கூறியுள்ளார்.*(பக்.173-174
)
ஆனால்,
இசை நூல்களில் கருங்காலி, செங்காலி, சந்தனம்,
வேங்கை, மூங்கில், தோதகத்தி (ரோஸ்வுட்), வெப்புலா, வெண்கலம், வெள்ளி, பொன், யானைத்தந்தம்,
போன்றவற்றில் நாகசுரம் செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது. சுரபுன்னை, புன்னை மரம் போன்றவை
குறிப்பிடவில்லை.
தமிழிசையறிஞர் வீ.ப.கா. அவர்களின்
கருத்து :
"சுருங்கலும்
நீட்டலும் உடைய காரணத்தால் நாவு - நாக்கு எனப்பெயர் பெயராயின. நாக்கினை நீட்டவும் முடக்கவும்
செய்கின்ற காரணத்தால் பாம்பு ஆனது நாகம் எனப் பெயர் பெற்றது. நீர்வாழ்வு நத்தையும்
உடலை சுருக்கலும் நீட்டலும் செய்வதால் 'நாகு' எனப் பெயர் பெற்றது. நாகசுரத்தின் கொறுக்கை
வாயினுள் சென்றும் வருவதுமாக உள்ளதால் நாகசுரம் எனப் பெயராயிற்று."
அறிஞர்
வீ.பா.கா. அவர்கள் சொல்லியது சிந்திக்கத்தக்கதாக உள்ளது. நாகத்தின் உருவத்தில் இருப்பதால்
நாகசுரம் எனப் பெயர் வந்திருக்கும் என சில ஆய்வாளர்கள் சொல்லுவதையும், வீ.ப.கா. அவர்கள்
சொல்லுவதையும் இணைத்துப் பார்த்தால், நாகத்தைப் போன்று தோற்றத்தையும், செய்கையையும்
உடையதால் நாகசுரம் என அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தைத்
தோற்றுவிக்கிறது.
நாதசுரம் எனும் பெயர் :
பிற்காலத்து இசை நூல்களான மகாபரத சூடாமணி, வாத்திய
மரபு போன்ற நூல்களில் நாதசுரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
முகவீணை
நாகசுர மொழிபாம்பு நாதசுரந்
தகுசீங்
குழன் முதலாய்ச் சாற்றுஞ் - சுகமிகவே
தங்குமிவ்
வாத்தியத்திற் காயந்திட்டார் நூல்வல்லோர்
மங்கள
வாத்யமெனு நாமம். - மகா.சூ.855
மேற்கண்ட மகாபரத சூடாமணி பாடலில், நாகசுரம் மற்றும்
நாதசுரம் என்ற இரண்டு பெயர்களும் இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது. ஆனால், மற்ற
பாடல்களில் நாதசுரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நாகசுர மொழிபாம்பு என்ற அடைமொழி,
நாகசுரத்தில் வாசிகப்படும் மகுடியைக் குறிப்பதாக இருக்கலாமென உரையாசிரியர் கூறுகிறார்.
மகாபாரத
சூடாமணியின் மற்றொரு பாடலில், வேதத்தில் கூறப்படும் சிவமெனும் நாதகீதம் ஆகிய சீவளி
(சீவாளி) இலையினை நாவினால் இசைப்பதினால் தோன்றும்
‘நாதத்தின் சுரம்’ இவை தாமே என்று
கூறப்படுவதால், நாதசுரம் எனும் பெயருக்கு இதுவே
சரியான விளக்கமாக அமைந்துள்ளது.
அதாவது,
நாகசுரத்தில் மேற்புறத்தில் வைத்து வாசிக்கப்படும் சீவாளி எனும் உறுப்பு, நாதகீதத்தின்
உருவமாய்த் திகழும் சிவனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளதால், அதிலிருந்து பிறக்கும் சுரம் - நாதத்தின் சுரம்
- நாதசுரம் என பொருள்படுகிறது.
எனவே,
நாதசுரம் எனும் பெயரும் பொருள் அடிப்படையில் பொருத்தமானதே!
சீவளி
யிலைவே தத்தின் சிவமெனு நாதகீதம்
பாவளி
யச்சுக் காளி பாரமாய் வகுத்து நன்றாய்ப்
பூவளி
சுரங்க ளேழும் புகழ்சத்த மாதாவாகும்
நாவளி
இசையே பேசு நாதத்தின் சுரமி தாமே (869)
மகாபரத
சூடாமணி இசை நூல், பிற்கால இசை - நாட்டிய கலைஞர்களிடம் அதிகமாக வழங்கப்பட்டதால், நாதசுரம் எனும் பெயர் பிற்காலத்தில் வழக்கத்திற்கு
வந்திருக்கலாம்.
எனவே,
நாகசுரம் எனும் பெயரே காலத்தால் பழைமையானது என்றும், நாதசுரம், நாதஸ்வரம் எனும் பெயர் வழக்கம், பிற்காலத்தில் ஏற்பட்டது என்பதை
அறிய முடிகிறது.