Saturday, 1 November 2025

நாகசுரமா? நாதசுரமா ?

நாகசுரமா? நாதசுரமா ?

நாகசுரம் எனும் பெயரே பொருத்தமான பழைய பெயர் என்று, ஆய்வாளர்களால் ஒருமித்த கருத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி அவர்கள் தனது தென்னிந்திய இசை அகராதியில், நாகசுரம் என்ற பெயரே சரியென்றும், நாதஸ்வரம் என்று சொல்கிற வழக்கம் 1930 தொடக்கம் தான் வழக்கத்திற்கு வந்தது என்று கூறியுள்ளார். பேராசிரியர் ராகவன், ம்யூசிக் அகாடமி மலர்க்  கட்டுரையொன்றில், நாதசுரம் என்ற சொல் பொருள் ரீதியில் இவ்வாத்தியத்திற்கு பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

    16 ஆம் நூற்றாண்டினைச்  சேர்ந்த இரத்தின கிரி உலா, 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது போன்ற சிற்றிலக்கியங்களில், நாகசுரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்கால இசை நூல்களான, பரத சங்கிரகம் (16 ஆம் நூற்றாண்டு), நடனாதி வாத்திய ரஞ்சனம், பரத சேனாபதியம்  முதலிய நூல்களில் நாகசுரம் என்றே கூறப்பட்டுள்ளது. சங்கீத பாரிஜாதம்,  ஸ்கந்த புராணம் போன்ற வடமொழி நூல்களில் நாகஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டி கவசத்தில் "உருத்திர வீணை நாகசுர மேளம் தித்திமி" என்று தேவர்களாட என்று வருகிறது. மேலும், மற்ற தென்னிந்திய மொழிகளில் அமைந்துள்ள இலக்கியங்களில் நாகஸ்வரம், நாகசாரம், நாகச்சின்னம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. எனவே, நாகசுரம் என்பதே பழமையான பெயர் என அறிய முடிகிறது.

    நாகசுரம் என்று பெயர் வந்ததிற்கான பொதுவான காரணமாக சில ஆய்வாளர்களால் கூறப்படுவது, தமிழகத்தில் வாழ்ந்த நாகர்கள் எனும் ஆதி குடியினரால் கண்டுபிடிக்கப்பட்டதால் இது நாகசுரம் என்று அழைக்கப்பட்டதென்றும், நாகத்தை ஆட்டும் நாகர்கள் மகுடி வாசித்தது போலவே, அதையொத்தக் கருவியையும் நாக என்ற முன்னொட்டு கொடுத்து அழைத்தனர் என்றும்  சொல்லப்படுகிறது.

இலக்கியங்களிலும், மற்ற சான்றுகளிலும் 500 ஆண்டுகளுக்கு முன்புதான் நாகசுரம் எனும் பெயர்க் காணப்படுவதால், நாகர் என்பவர்களிடமிருந்து நாகசுரம் எனப்பெயர் வந்தது என்பது, பொருந்தாத விளக்கமாக அமைகிறது. அதோடு, அதற்கு தகுந்த சான்றும் கிடைக்கப்பெறவில்லை.

நாகசுரமே சரியான பெயரென்று சில அறிஞர்களால் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

தமிழறிஞர் மு.அருணாச்சலம் அவர்களின் கருத்து :

மு. அருணாச்சலம் அவர்கள் தனது 'தமிழ் இசை இலக்கண வரலாறு ' எனும் நூலில், புன்னை மரத்தின் வகையாகிய நாகம் எனும்  பெயர் கொண்ட சுர புன்னை மரத்தில் ஆதியில் இக்கருவி செய்யப்பட்டதால், நாகசுரம் என அழைக்கப்பட்டதாக கூறியுள்ளார். புன்னைக்கும் புன்னாகம் என்ற பெயர் உண்டு. மேலும் அவர், "ஒரு கால் புன்னையின் வகையான இது இசை வாசிப்பதற்கும், பொருத்தத்தமான இசைக்கருவி செய்வதற்கும் பயன்பட்டமையால் இது, சுர புன்னை  என்று பெயர் பெற்றது என்றும் கருதலாம். நாகசுர மரம் என்றும் இதைச் சொல்வதுண்டு". என்றும் கூறியுள்ளார்.*(பக்.173-174 )

ஆனால், இசை நூல்களில்  கருங்காலி, செங்காலி, சந்தனம், வேங்கை, மூங்கில், தோதகத்தி (ரோஸ்வுட்), வெப்புலா, வெண்கலம், வெள்ளி, பொன், யானைத்தந்தம், போன்றவற்றில் நாகசுரம் செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது. சுரபுன்னை, புன்னை மரம் போன்றவை குறிப்பிடவில்லை.

தமிழிசையறிஞர் வீ.ப.கா. அவர்களின் கருத்து :

"சுருங்கலும் நீட்டலும் உடைய காரணத்தால் நாவு - நாக்கு எனப்பெயர் பெயராயின. நாக்கினை நீட்டவும் முடக்கவும் செய்கின்ற காரணத்தால் பாம்பு ஆனது நாகம் எனப் பெயர் பெற்றது. நீர்வாழ்வு நத்தையும் உடலை சுருக்கலும் நீட்டலும் செய்வதால் 'நாகு' எனப் பெயர் பெற்றது. நாகசுரத்தின் கொறுக்கை வாயினுள் சென்றும் வருவதுமாக உள்ளதால் நாகசுரம் எனப் பெயராயிற்று."

அறிஞர் வீ.பா.கா. அவர்கள் சொல்லியது சிந்திக்கத்தக்கதாக உள்ளது. நாகத்தின் உருவத்தில் இருப்பதால் நாகசுரம் எனப் பெயர் வந்திருக்கும் என சில ஆய்வாளர்கள் சொல்லுவதையும், வீ.ப.கா. அவர்கள் சொல்லுவதையும் இணைத்துப் பார்த்தால், நாகத்தைப் போன்று தோற்றத்தையும், செய்கையையும் உடையதால் நாகசுரம் என அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற   கருத்தைத் தோற்றுவிக்கிறது.

நாதசுரம் எனும் பெயர் :

    பிற்காலத்து இசை நூல்களான மகாபரத சூடாமணி, வாத்திய மரபு போன்ற நூல்களில் நாதசுரம் என்றே  குறிப்பிடப்பட்டுள்ளது.

முகவீணை நாகசுர மொழிபாம்பு நாதசுரந்

தகுசீங் குழன் முதலாய்ச் சாற்றுஞ் - சுகமிகவே

தங்குமிவ் வாத்தியத்திற் காயந்திட்டார் நூல்வல்லோர்

மங்கள வாத்யமெனு நாமம். -   மகா.சூ.855

 

    மேற்கண்ட மகாபரத சூடாமணி பாடலில், நாகசுரம் மற்றும் நாதசுரம் என்ற இரண்டு பெயர்களும் இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது. ஆனால், மற்ற பாடல்களில் நாதசுரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நாகசுர மொழிபாம்பு என்ற அடைமொழி, நாகசுரத்தில் வாசிகப்படும் மகுடியைக் குறிப்பதாக இருக்கலாமென உரையாசிரியர் கூறுகிறார்.

மகாபாரத சூடாமணியின் மற்றொரு பாடலில், வேதத்தில் கூறப்படும் சிவமெனும் நாதகீதம் ஆகிய சீவளி (சீவாளி) இலையினை நாவினால் இசைப்பதினால் தோன்றும்  ‘நாதத்தின் சுரம்’ இவை தாமே என்று கூறப்படுவதால்,  நாதசுரம் எனும் பெயருக்கு இதுவே சரியான விளக்கமாக அமைந்துள்ளது.

அதாவது, நாகசுரத்தில் மேற்புறத்தில் வைத்து வாசிக்கப்படும் சீவாளி எனும் உறுப்பு, நாதகீதத்தின் உருவமாய்த் திகழும் சிவனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளதால்,  அதிலிருந்து பிறக்கும் சுரம் - நாதத்தின் சுரம் - நாதசுரம் என பொருள்படுகிறது. எனவே, நாதசுரம் எனும் பெயரும் பொருள் அடிப்படையில் பொருத்தமானதே!

சீவளி யிலைவே தத்தின் சிவமெனு நாதகீதம்

பாவளி யச்சுக் காளி பாரமாய் வகுத்து நன்றாய்ப்

பூவளி சுரங்க ளேழும் புகழ்சத்த மாதாவாகும்

நாவளி இசையே பேசு நாதத்தின் சுரமி தாமே (869)

 

மகாபரத சூடாமணி இசை நூல், பிற்கால இசை - நாட்டிய கலைஞர்களிடம் அதிகமாக வழங்கப்பட்டதால்,  நாதசுரம் எனும் பெயர் பிற்காலத்தில் வழக்கத்திற்கு வந்திருக்கலாம்.

எனவே, நாகசுரம் எனும் பெயரே காலத்தால் பழைமையானது என்றும், நாதசுரம், நாதஸ்வரம் எனும்  பெயர் வழக்கம், பிற்காலத்தில் ஏற்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

No comments:

Post a Comment