வரலாறு
என்பது நிகழ்வுகளின் தொகுப்புதானே! ஆனால், அந்நிகழ்வுகள் எல்லாம் பேசப்படுகிறதா?
சிறப்பு வாய்ந்த சில நிகழ்வுகளே பேசப்படுகின்றன. அதிலும், சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள்
எல்லாம் கொண்டாடப்படுவதில்லை. அதற்கு பின்புலம், ஆதரவாளர்கள் தேவை. அது இல்லாத போது
காலப்போக்கில் அது, மறக்கப்படுகிறது. மீண்டும் அதை நினைவுக் கூறும் கடமை, ஒரு ஆய்வாளருக்குத்தானே
உள்ளது!
'சங்கீத தாள ராக மாலை' எனும் இசை நூலின் அரங்கேற்றம்
'சங்கீத தாள ராக மாலை' எனும் இசை நூல், சென்னையைச் சேர்ந்த ஆவடி எம்.ஜி.குப்புசாமி பிள்ளை எனும் நாகசுரக் கலைஞரால் இயற்றப்பட்டதாகும். இந்நூலின் அரங்கேற்ற விழா, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக நடந்துள்ளது.
இந்நூல்
மறுபதிப்பு செய்யப்படாததாலும், கிடைப்பது அரிதாக இருப்பதாலும் இன்று பலரால் அறியப்படவில்லை.
ஆனால், அன்று இந்த நூல் பலராலும் போற்றப்பட்டது என்பதை, இந்நூலின் அரங்கேற்ற நிகழ்வினைக்
கொண்டே தெரிந்து கொள்ளலாம்.
தஞ்சை
சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் ஞாபகார்த்தமாய் நடந்த (17.2.1965) சங்கீத மகால் திறப்பு
விழாவில், சங்கீத ரத்னாகர, சங்கீதக் கலாநிதி அரியக்குடி அவர்கள் தலைமையேற்க, ‘சங்கீத
தாள ராக மாலை’ அரங்கேற்றம் செய்யப்பட்டது, சிறப்பு வாய்ந்த வரலாற்று நிகழ்வாகும்.
அரியக்குடி திரு.டி.இராமாநுஜ அய்யங்கார் தலைமையில், அறநிலைய பாதுகாப்பாளர் திரு.எம்.எஸ்.சாரங்கபாணி முதலியார் துவக்கி வைத்த விழாவில், பல புகழ்ப் பெற்ற இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி, ஆவடி மேட்டுப்பாளையம் திரு. எம்.ஜி.குப்புசாமி அவர்களால் இயற்றப்பட்ட சங்கீத தாள ராக மாலை நூலுடன் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இந்த
அரங்கேற்ற நிகழ்விற்கு மற்றுமொரு ஆகப் பெரும் சிறப்பு உள்ளது. அது என்னவென்றால், இந்த
ஊர்வலத்திற்கு நாகசுரம் வாசித்தவர், நாகசுர மேதை அய்யம்பேட்டை வேணுகோபால பிள்ளை ஆவார்.
புரொபஸர்
திரு.வி.இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்நூலை வெளியிட்டார். இசைக்கலைஞர்கள் யாவரும் இந்நூலையும்,
ஆசிரியரையும் பாராட்டிப் பேசினர். இயக்குனர்
கே.சுப்பிரமணியம் அவர்களால் அளிக்கப்பட்ட பொன்னாடையை அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்,
குப்புசாமி அவர்களுக்கு அணிவித்து, போற்றி
புகழ் மாலைச் சூட்டினார்.
மற்றொரு
சுவையான செய்தி, இந்நூலின் உருவாக்கத்திற்காக மதுரை பொன்னுத்தாயி மற்றும் நாகசுர மேதை திருவெண்காடு டி.பி.சுப்பிரமணியம் அவர்கள் இசை நிகழ்ச்சி
செய்து தலா 300 ரூபாய் பொருளதவி செய்துள்ளதும்
குறிப்பிடத்தக்கது.
இசை
வரலாற்றில் ஒரு நாகசுரக் கலைஞரின் இசை நூல்,
அந்நூலாசிரியராலேயே அரங்கேற்றம் கண்டது, இதுவே
முதன் முதலாகும் என்றால் அது மிகையாகாது!


_1%20(1).jpg)
No comments:
Post a Comment