Saturday, 27 December 2025

'சங்கீத சாகித்ய வித்வான்' திருவீழிமிழலை எஸ். கல்யாணசுந்தரம் பிள்ளை இசையமைத்த 'நவரத்தின கீர்த்தனை மாலை'


 


நவரத்ன கீர்த்தனை  மாலை எனும் இந்த இசை நூல், 1966 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் எடமணல் லிங்கப்பா நாயுடுவினால் (1800-1871) இயற்றப்பட்ட 11 கீர்த்தனைகள் மற்றும்  1 பதமும், அடங்கியுள்ளது.  இந்நூலைத் தொகுத்து வெளியிட்டவர், திரு. வி.ராமச்சந்திரா நாயுடு ஆவார்.

இப்பாடல்களுக்கு இசையமைத்தவர், 'சங்கீத சாகித்ய வித்வான்' திருவீழிமிழலை திரு. எஸ்.கல்யாணசுந்தரம் பிள்ளை ஆவார். இவர், 'திருவீழிமிழலை சகோதர்கள்' என்று அழைக்கப்பட்ட புகழ் பெற்ற நாகசுர கலைஞர்களான சங்கீதக் கலாநிதி திரு.எஸ்.சுப்ரமண்ய பிள்ளை, திரு.எஸ்.நடராஜசுந்தரம் பிள்ளை சகோதரர்களின் இளைய சகோதரர் ஆவார்.


திரு.கல்யாணசுந்தரம் அவர்கள், வாய்ப்பாட்டில் நிபுணராக விளங்கினார். இசைஞான யோகி காஞ்சிபுரம் நயினா பிள்ளையின் மாணவராவார். இவர், சொந்தமாகப் பல பாடல்களையும் இயற்றியுள்ளார். மேலும், வி.இராமச்சந்திரா நாயுடு அவர்கள் இயற்றியுள்ள 'வேங்கடேஸ்வர கீர்த்தனை மாலை' எனும் நூலில் அமைந்துள்ள பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

எடமணல் எஸ்டேட்டின் ஸ்தாபகரான லிங்கப்பா நாயுடு அவர்கள், உயர்ந்த செல்வந்தராகவும், சங்கீதக் கலைஞர்களுக்கு ஆதரவளித்த வள்ளலாகவும் விளங்கியவர். இவர், பிற்காலத்தில் வியாதியினால் நலிவடைந்து துன்பப்படும் போது, இறைவனைத் துதித்துப் பாடல்கள் இயற்றி, துன்பத்திலிருந்து விடுபட்டுள்ளார். இவர் 200 கீர்த்தனைகளுக்கு மேல் இயற்றிருந்தாலும், 12 பாடல்களே கிடைத்துள்ளன. இவரது பரம்பரையைச் சேர்ந்த வி.ராமச்சந்திரா நாயுடு அவர்களால் இக்கீர்த்தனைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 



'நவரத்ன கீர்த்தனை மாலையில், 6 தெலுங்குப்  பாடல்களும் 6 தமிழ்ப் பாடல்களும் அமைந்துள்ளது. திரு.லிங்கப்பா நாயுடு (1800-1871) அவர்கள், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் காலத்தில் வாழ்ந்தவர். இதனால், தியாகராஜர் காலத்திலேயே ஏராளமான தமிழ் கீர்த்தனைகளும் பாடப்பட்டதை அறிய முடிந்தாலும், தகுந்த சிஷ்யப் பரம்பரையும் அச்சு வடிவங்களும் இல்லாததால், பல இசை வடிவங்கள் அழிந்து விட்டதை உணர  முடிகிறது.

திரு. கல்யாணசுந்தரம் அவர்கள், இப்பாடல்களுக்கு இசையமைத்துள்ள முறையினை  தனது உரையில் கூறும் போது, இப்பாடல்கள் பழைய கர்னாடக இசை முறையில் அமைந்துள்ளதாகவும், தாளச் சூட்சுமங்களுடன் அமைந்துள்ளதால், அவற்றின் சந்த அடிப்படையிலேயே இசையமைத்துள்ளதாகவும் கூறியுள்ளது, குறிப்பிடத்தக்கதாகும்.  இதனால், தமிழ் மொழியின் இயல்பையும் அதன் தனித்த இசை மரபையும் அறிய முடிகிறது. முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை பாடல்களும் இவ்வகையில் அமைந்ததே! இப்பாடல்களுக்கு இசையமைத்துள்ள திருப்பாம்புரம் என்.சுவாமிநாத பிள்ளையவர்களும், இம்முறையிலேயே இசையமைத்துள்ளார்கள் என்பதை, அப்பாடல்களின் இசையமைப்பிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

மேலும், தாளச் சூட்சுமங்கள் அறிந்தவர்களினால் மட்டுமே இப்பாடல்களுக்கு இசையமைக்க முடியும் என்று கூறியுள்ள கல்யாணசுந்தரம் பிள்ளையவர்கள்,  தனது குருநாதர் காஞ்சிபுரம் நயினா பிள்ளையால் தனக்குப் போதிக்கப்பட்ட தாள நுட்பச் செய்யுளையும் அதற்கு உதாரணமாகக் கூறியுள்ளது சிறப்பானதாகும்.

பராத்ம நஸ்த்ததாகாசம் வாயு ரக்னிஜலஸ்ததா

பூமிஸ்ததா மணுச்சைவ  ராஜதர்மார்த்தி சத்யதம்

புண்டரீகம் ததாஜாத மதிசூக்ஷ்மம் ப்ரகீர்த்திதம்

 

அக்கினியில் உஷ்ணமும், பூவில் மனமும் இருப்பது போல், அருஞ்சொற்களில் தாளத்தின் தன்மை அமைந்துள்ளது, என்பது இதன் பொருளாகும்.

திரு. கல்யாணசுந்தரம் பிள்ளை, சாவேரி, சகானா, சாமா, காமாஸ் போன்ற பழைய ராகங்களிலும், காங்கேயபூஷணி, ராகவர்த்தனி போன்ற அரிய ராகங்களிலும்  சிறப்பாக இசையமைத்துள்ளார். இப்பாடல்கள் வழக்கமான பாடல்களைப் போல் அல்லாது, தனித்தன்மையுடன் அரங்கிசைக்கு உரியதாக, இனிமையாக அமைந்துள்ளது. ஆனால், இப்பாடல்கள் கச்சேரிகளில் பாடப்படாமல் மறைவாகவே இருந்து வருவது  வருந்தத்தக்கதாகும். வருங்காலத்தில் இப்பாடல்களை நிகழ்ச்சிகளில் பாடியும், வாசித்தும் வரவேண்டியது நமது கடமையும், அப்பெரியார்களின் இசைத் தொண்டிற்கு நாம் செய்யும் வணக்கமும் ஆகும்.

 

 

Sunday, 21 December 2025

நூற்றாண்டு விழா காணும் நாகசுர நாயகர்

 

ஜாதி, மதம் தாண்டிய  நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்குவது இசை ஒன்றேயாகும். இத்தகைய மத நல்லிணக்கத்தை இசை மூலம் பறைசாற்ற தோன்றிய உன்னத இசைக்கலைஞர், திரு. ஷேக் சின்ன மௌலானா ஆவார்.

இவர், ஆந்திராவின் (கரவடி) பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் 1924 ஆம் ஆண்டு, மே 12 இல் தோன்றியவர். பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் சிலுக்கலூரிப்பேட்டை என்னும் இடத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாகசுரக் கலைஞர் ஷேக் ஆதம் சாஹிப் அவர்களிடமும் பயிற்சிப் பெற்றார்.

சிறுவயதிலேயே நாகசுர சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டு பிரமித்த இவர், தஞ்சாவூர் பாணியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் தமிழகம் வந்து, நாகசுர மேதை நாச்சியார்கோவில் துரைக்கண்ணு பிள்ளையிடம் குருகுலம் மேற்கொண்டார்.  தனது கடின உழைப்பின் மூலம் மேன்மையான  நாகசுரக் கலைஞராக உருவானார். 1970 ஆம் ஆண்டில் அவர் கொடுத்துள்ள கொலம்பியா இசைத்தட்டில், திருவாடுதுறையாரின் பிரதிபலிப்பைக் காண முடியும். அதில் வாசித்துள்ள ‘ஜானகி ரமணாவும்’, ‘வள்ளிநாயகனும்’, ராஜரெத்தினம் பிள்ளையே மௌலானா உருவில் வாசித்துள்ளதாக எண்ணும்படி,  மெய்ச் சிலிர்க்க வைப்பவை. சண்முகப்ரியா ராக ஆலாபனையில் மௌலானா அவர்கள்  வாசித்துள்ள துரிதகாலப் பிருக்காக்களும், வக்ர சங்கதிகளும் அவரது கடின உழைப்பிற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

நாகசுரத்தில் தனக்கென்ற தனிப் பாணியைத் தோற்றுவித்து, ரசிகர்களுக்கு நாத இன்பத்தை வழங்கிய இவரின்  நாகசுர பாணியின் சிறப்பாக ‘ஒத்து மூச்சை’ கூறலாம். நாகசுரத்தில் மூச்சைக் கட்டுப்படுத்தி வாசிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனாலேயே இது, ராஜ வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. தனது கடுமையான பயிற்சியின் மூலம் அதை சாதித்துக் காட்டிய மௌலானா அவர்கள், ராக ஆலாபனையில் சங்கதிகள் துண்டு துண்டாக இல்லாமல், தொடர்ந்து நீண்ட நேரம் சங்கிலித் தொடராக வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். மேலும், ராக மூர்ச்சனைகளின் அழகு நன்கு வெளிப்படும்படி, சம்வாதி (முடிவு) சுரத்தில் அதிக கார்வைக் கொடுத்து நின்று வாசிப்பதும் இவரது பாணியின் சிறப்பாகும்.

சாகித்ய சுத்தம், முழுமையான  அகாரம், பிசிறு இல்லாத தெளிவு, சுருதி சுத்தம்,  காலப்ரமாணம், நீண்ட நேர ப்ருகாக்கள் போன்றவை இவரது வாசிப்பின் சிறப்புகளாகும்.  காம்போதி ராகத்தில் வாசித்துள்ள "ஓ ரங்க சாயி" என்ற கீர்த்தனைப் பதிவு, இவரின் சாகித்ய ஞானத்திற்கும்,  அகார சுத்தத்திற்கும் சான்றாகத் திகழ்கின்றது. இந்த செளக்யமு - காபி ராக பதிவில், ராக ஆலாபனையின் முடிவில் 'தன்னகாரம்'  (மெல்லியதாக) ஆக, காபி ராகத்தின் சுரங்களைச் சுருதியோடு இழைத்து, மனதை வசீகரப்படுத்துமாறு  வாசித்துள்ள பாங்கு மிகவும் சிறப்பானதாகும்.

பொதுவாக ராக ஆலாபனையின் இடையே  ப்ருக்காக்கள் வாசிப்பதே வழக்கமாகும். ஆனால், மௌலானா அவர்கள் கீர்த்தனையிலேயே  சங்கதிகளுக்கு இடையில், பதச் சேதம் இல்லாமல், தாளத்தின் காலப்பிரமானம் மாறாமல் ப்ருக்காக்களைப் பொழிவதில் வல்லவராகத் திகழ்ந்தார். நகுமோமு(ஆபேரி) கீர்த்தனையின் இசைப் பதிவில், சரணத்தில் இவர் வாசித்துள்ள ப்ருக்காக்கள் மெய் சிலிர்க்க வைப்பவை.

இவ்வாறான இசை நுணுக்கங்கள் அனைத்தையும் தனது வாசிப்பில் வெளிப்படுத்தி, வருங்கால இசைக்கலைஞர்களுக்கு நாகசுரத் துறையின் சிறந்த முன்னோடியாகத் திகழும்  சங்கீதக் கலாநிதி  சின்ன மௌலானா அவர்கள், தென்னிந்திய நாகசுர மரபில், சிறந்த நாகசுர மேதைகளின் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் ஆவார்.

இவர் ஆந்திராவில் பிறந்திருந்தாலும்,  திருச்சி - திருவரங்கத்தில் வாழ்ந்து தஞ்சாவூர் பாணியை வளர்த்த,  திரு. சின்ன மௌலானா அவர்களுக்கு உலகமெங்கும் தற்பொழுது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது,  தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும்  பெருமை தருவதாகும்.

சண்முகானந்தா பைன் ஆர்ட்ஸ் @ சங்கீத சபா வெளியிடும் காலாண்டிதழில், பத்ம ஸ்ரீ ஷேக் மௌலானா சாஹேப் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு வெளிவந்த  சிறப்பிதழில்(ஏப்ரல் -ஜூன் 2024), இடம்பெற்ற  என்னுடைய கட்டுரை.

                                                                                                                        

Friday, 19 December 2025

‘இசைச் செல்வர்’ திருப்பாம்புரம் என்.சிவசுப்ரமண்ய பிள்ளை


 

திருப்பாம்புரம் எனும் ஊரின் பெயரில் அழைக்கப்படும் மிகப்பெரும் இசைப்பாரம்பரியத்தில், நாகசுர வித்வான் உயர்திரு சுவாமிநாத பிள்ளையின் பேரனாகவும், நாகசுர வித்வான் உயர்திரு நடராஜ சுந்தரம் பிள்ளையின் மூன்றாவது மகனாகவும் 1917 ஆம் ஆண்டுப்  பிறந்தவர் சிவசுப்பிரமண்ய பிள்ளையாவார்.

திருப்பாம்புரம் இசைப் பாரம்பரியத்தின் முன்னோரான சிதம்பரம் அமிர்தகவி அவர்கள், தமிழிசை மூவரில் ஒருவரான முத்துத்தாண்டவரின் உடனிருந்து, அவரது கீர்த்தனைகளைத் தொகுத்தவர். இவரது பரம்பரையில் வந்த உயர்திரு சாமிநாத பிள்ளை, முதல் முதலாக நாகசுரம் கற்று, புகழ் பெற்ற நாகசுரக் கலைஞராக விளங்கினார்.

திருப்பாம்புரம் சாமிநாத பிள்ளை, தனது மகன்கள் நடராஜ சுந்தரம் மற்றும் சிவசுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் நாகசுரம் கற்றுக் கொடுத்து, 'திருப்பாம்புரம் சகோதரர்கள்' என,  இரண்டு நாகசுரமாக இணைந்து வாசிக்கும் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.

நாகசுர வித்வான் சா. நடராஜ சுந்தரம் பிள்ளை, தீக்ஷிதர் கீர்த்தனைகளில் ஐம்பதை, தமிழில் முதன் முதலாக சுர தாளக் குறிப்புடன், 'தீக்ஷிதர் கீர்த்தன பிரகாசிகை' எனும் நூலாக வெளியிட்டுள்ளார். இவருக்கு சுவாமிநாதன், சோமசுந்தரம், சிவசுப்ரமணியம் என்று மூன்று மகன்கள் ஆவர். 





நடராஜ சுந்தரம் பிள்ளை, தனது மகன்களுக்கு நாகசுரம் கற்றுக்கொடுத்ததோடு, தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் போன்றவையும் தனித்தனி ஆசிரியர்களை வீட்டிலேயே அமர்த்தி சொல்லிக்கொடுத்தார்.

தொடக்கத்தில் நாகசுரம் வாசித்த சுவாமிநாத பிள்ளையவர்கள், நாகசுரம் வாசிப்பதை விடுத்து,  புல்லாங்குழலில் நிபுணரானார். பிறகு, சோமசுந்தர பிள்ளையவர்களும்  சிவசுப்பிரமணிய பிள்ளையவர்களும் இணைந்து நாகசுரம் வாசித்தனர். இச்சகோதரர்கள் ஆல் இந்தியா ரேடியோவில் வாசித்துள்ளனர். பிறகு, சிவசுப்ரமணிய பிள்ளை வாய்ப்பாட்டில்  நிபுணர் ஆனார். சோமசுந்தரம் பிள்ளையவர்கள், பழனி இசைக் கல்லூரியில் முதல் நாகசுர ஆசிரியராகவும் பணியாற்றி, பல மாணவர்களை உருவாக்கியுள்ளார்.


(வலமிருந்து இடம்)

திருப்பாம்புரம் உயர்திரு, என்.சுவாமிநாத பிள்ளை

திருப்பாம்புரம் உயர்திரு, என்.சோமசுந்தரம் பிள்ளை

திருப்பாம்புரம் உயர்திரு, என். சிவசுப்பிரமணிய பிள்ளை

சிவசுப்ரமணிய பிள்ளையின் முதல் கச்சேரி, விஷ்ணுபுரம் அக்ரஹாரத்தில் பெரிய வீடு அய்யர் என அழைக்கப்படும் இல்லத்தில் நடைப்பெற்றது. வாய்ப்பாட்டுக் கலைஞராக புகழ் பெற்ற திருப்பாம்புரம் சிவசுப்பிரமணிய பிள்ளை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1942 முதல் 1977 வரை குரலிசை விரிவுரையாளராகவும், இசைத்துறை தலைவராகவும் பணியாற்றினார்.

இவர், சொந்தமாகப் பாடல்களை இயற்றியுள்ளார். மேலும், பாடல்களுக்கு சுர தாள குறிப்பு எழுதுவதில் திறமைப் பெற்றிருந்தார். இவர் தந்தை நடராஜசுந்தரம் பிள்ளையின் 'தீக்ஷிதர் கீர்த்தன ப்ரகாசிகை' நூலின் பதிப்புப் பணியில், இவரது பங்களிப்பு முக்கியமானதாகும். மேலும், இவரது மூத்த சகோதரர் சுவாமிநாத பிள்ளை இசையமைத்த  முத்துத்தாண்டவர் மற்றும் மாரிமுத்தா பிள்ளையின்  கீர்த்தனைகள், எம்.எம்.தண்டபாணி தேசிகர் இயற்றிய பாடல்கள் போன்றவற்றில், சிவசுப்ரமணிய பிள்ளையின் சுர தாள குறிப்பின் சிறப்பினைக் காணலாம்.




அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழிசை வெளியீடுகளில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கதாகும். இவர் சுர தாள குறிப்பு எழுதியுள்ள பாடல்கள், அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும், தெளிவானதாகவும் அமைந்திருப்பதோடு, அவற்றின் அச்சுப் பிரதியில் தவறு ஏதும் இல்லாதவாறு சரிபார்த்து,  அவற்றினைப் பதிப்பித்துள்ளார். எனவே, தமிழிசையின் வளர்ச்சியில் இவரது பங்களிப்பு எக்காலத்திலும் போற்றுதலுக்குரியதாகும்.

விருது மற்றும் பட்டங்கள்

"இசைச் செல்வர்" (கோல்டு மெடல்) எனும் பட்டம் 1940 ஆம் ஆண்டு எழும்பூர், ஸ்ரீனிவாச பெருமாள் தேவஸ்தானத்தில் வழங்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு, 55 வது இசை மாநாட்டில் (மியூசிக் அகாடமி) மூத்த குரலிசைக் கலைஞருக்கான "யோகம் நாகசாமி நினைவு விருது வழங்கப்பட்டது.

 


தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் 1975 - 1976 ஆம் ஆண்டுக்கான   “கலைமாமணி” விருது வழங்கப்பட்டது.

மியூசிக் அகாடமியில் பலமுறை குரலிசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். மேலும் மியூசிக் அகாடமியில், 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற இசை மாநாட்டில், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் திருவாரூர் பஞ்சலிங்கக் கீர்தனைகளைப் பற்றி விரிவுரை வழங்கியுள்ளார்.





‘இசைச் செல்வர்’ என்.சிவசுப்ரமண்ய பிள்ளை பாடிய  குரலிசையின் பதிவு, இணையத்தில் கிடைக்கிறது(நாதப்ருங்கா யூ டுயூப்). அவற்றைக் கேட்கும் போது, அவரது இசையின் சிறப்பையும்  உயர்வையும் அனைவரும் அறிய முடியும். நாதபிருங்காவின் இந்தப் பணி, போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரியதாகும்.



சிவசுப்ரமண்ய பிள்ளை, நாகசுரம் மற்றும் வாய்ப்பாட்டுத் தவிர புல்லாங்குழலும் வாசித்துள்ளார். ஒருமுறை, ஆல் இந்தியா ரேடியோவில், கே.சி.தியாகராஜன் ஒருங்கிணைத்த  "திருப்பாம்புரம் பாரம்பரியம்" எனும் நிகழ்ச்சியில் புல்லாங்குழல் வாசித்துள்ளார்.




இஞ்சிக்குடி சுப்ரமணிய நாயனக்காரரின் மகளும், நாகசுர வித்வான் இஞ்சிக்குடி முத்துக்குமாரசுவாமியின் தங்கையுமாகிய காமாட்சி அவர்களை மணந்த சிவசுப்பிரமணிய பிள்ளைக்கு, இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இவரது மகன் டி.எஸ்.திருநாவுக்கரசு அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று, சென்னை தமிழிசைக் கல்லூரியில், குரலிசை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.


    திருப்பாம்புரம் எனும் உயரிய இசைப்பாரம்பரியத்தில் தோன்றி, அதன் சிறப்பையும் மரபையும் காப்பாற்றும் விதமாக, இலக்கணம் மற்றும் மரபு வழுவாத மூத்த இசைக்கலைஞராகவும், பல மாணவர்களை உருவாக்கிய ஆசிரியராகவும் விளங்கிய சிவசுப்பிரமணிய பிள்ளையவர்கள், 1981 ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்தில் சிதம்பரம் நடராஜரின் பாதத்தில் ஒன்றெனக் கலந்துவிட்டார். தமிழிசைக்கு இவர் ஆற்றியுள்ள தொண்டுகள் காலத்தால் அழியாது, என்றும் தமிழிசையைக் காத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

நன்றி : திருச்சேறை டி.வி.எஸ்.எஸ்.ரகுவீரன் சிவசுப்ரமணியம் அவர்கள்.

நன்றி:  நாதபிருங்கா யூடூப் சேனல்

குறிப்பு நூல் : தமிழிசை நுணுக்கம் (திருப்பாம்புரம் எஸ்.சண்முகசுந்தரம்)