Wednesday, 27 May 2026

"தமிழிசை வள்ளல்" சுவாமி சரவணபவானந்தர்

 

 


'தமிழிசை இயக்கம்' என்று ஒன்று தொடங்குவதற்கு முன்பே,  முதன்முதலில் தமிழிசைப் புரட்சியைத் தூண்டிய மாபெரும் தமிழிசை அறிஞர் 'சுவாமி சரவணபவாநந்தர் ஆவார். 1930 ஆம் ஆண்டு தொடக்கத்தில்,

இசையினிலே தமிழிசைப்போல் இன்னிசையுண்டோ?

இன்பத் தமிழ்க்கிணை ஏது?

கலையைப் பழிக்காதே !

ஞான விநாயகனே !

என்ன தெரிந்து கொண்டாய்?

இத்தனை நாள் என்ன செய்தாய்?

தமிழை மறவாதே !

தானம் அவசியம் !

கதையைச் சொல்வேன் !

தேனொழுகு செந்தமிழிக் கனியைப் பிழிந்து !

பாட்டை கேட்டனையோ?

வடிவழகா!

கலைஞனை உலகம் கைவிடலாமா?

நாடகக் கலை ஒரு ஜீவன் !

ஐயாவின் கருணையினால் இருக்கிறது அதிர்ட்டம்

போன்ற உயிரூட்டமுள்ள பல பாடல்களைப் பாடி இசையுலகத்தில் புகழ்ப் பெற்றவர்.

இசை நிகழ்ச்சிகளின் இறுதியில்  'துக்கடா' எனும் வகையில்  தமிழ்ப் பாடல்கள் பாடப்படும் நிலையில் இருந்த பொது, தொடக்கமாகப் பாடுவதற்கு ஏற்ற பல பாடல்களை இயற்றி தமிழசைக்கு வளம் சேர்த்துள்ளார். அவற்றில், 'ஞானவிநாயகனே' எனும் தொடக்கப் பாடல் இசையுலகில் மிகவும் புகழ்பெற்றதாகும்.

சுவாமி சரவணபவானந்தர் சோழவள நாட்டைச் சேர்ந்த நாகப்பட்டினத்தில், சைவ சமயம் சார்ந்த கௌமார மரபில், துரைசாமி - வள்ளியம்மை எனும் தம்பதியருக்கு மகனாகப்  பிறந்தவர். இவரது இயற்பெயர் திருவரசமூர்த்தி என்பதாகும். இவரது வளர்ப்புத் தந்தை அரங்கசாமி என்பவராவார்.

இவர், ஆசிரியர் இராமலிங்கத் தேசிகர் அவர்களிடம் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்விக் கற்றார். தனது ஒன்பதாவது வயதில், முதுகுளத்தூர் பிச்சைக் கவிஞரிடம் இலக்கிய - இலக்கணப் பயிற்சிப் பெற்றார்.  தனது 12 ஆம் வயதில், நாகை துரைராஜ் என்பவரிடம் இசைப் பயின்றார். 16 ஆம் வயதில், இவருக்கு ஆறெழுத்து உண்மையினை அறிவித்து 'சரவணபவாநந்தா' எனும் தீட்சை பெயர் அளித்தவர், நீலகிரி - பிரம்ம ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் ஆவார்.

இவரது 19 ஆம் வயதில், சித்தர்கள் தத்துவம் உணர்த்தி, ஞான தீட்சை செய்து 'ஞான பண்டிதன்'என்னும் சிறப்புப் பெயர் தந்தனர்  திரிசிரபுரம் - பிரம்ம முடி  யதீந்திர சுவாமிகள். மகான் மாக்கான் சுவாமிகளிடம் இதோபதேசம் பெற்றார். உறையூர் நிர்வாண சுவாமிகளிடம் மெளனோபதேசம் பெற்றார். சித்தர் சுவாமிகளிடம் பலநாள் பழகியவர்.

தனது 20 ஆம் வயதில் சரஸ்வதி அம்மாள் எனும் குணவதியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். இவரது மகள் கார்த்திகாயனி, மகன் ஜோதிநாதன் ஆவார்.

இவரது பாடல்கள், பக்திப் பாடல்களாகவும், கருத்துவளம் செறிந்த தத்துவப் பாடல்களாகவும் இனிமையுடன் அமைந்துள்ளன. வள்ளலார் மீதும், சித்தர்கள் மீதும் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களின் சுவையை கவியோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு பாடுகிறார்.

வள்ளலார் வடித்த தேனும்

வேதநா யகனார் வார்த்த

தெள்ளிசை அமுதும்  உண்டு

தேனிசைத் திரட்ட ளித்தான்

தள்ளருந் தமிழ்த் தேன் பொங்கும்

சரவண பவன்என்  அன்பன்

உள்ளெலாம் உவப்பக் கூடி

உருகித்தேன் பருகு வோமே !

சுவாமிகள் இசைக்கேற்ற பல பாடல்களை எழுதி அவற்றை நூல்களாகவும் வெளியுட்டுள்ளார். அவை, இசைத்தேன், ஞானத்தமிழ், தேனிசைத் திரட்டு, குமரகுரு பஜனாமிர்தம், பேரின்ப கீதம், விற்பன்னர் அற்புத கீதம், முருக ஸ்மரணாமிர்தம், அருள் இசை அமுதம் போன்றவையாகும். இந்த இசை நூல்கள் மறு பதிப்பு இல்லாமலும், அனைவராலும் அறியப்படாமல் மறைந்து கிடக்கின்றன.

இசைப்பாடல்களோடு அல்லாமல் சிலப்பதிகாரம், மணிமேகலை, மாதவி, வாசுகி, அருளரசி, ராதையின் காதல், சுடர்க் கொடி, ஆறுபடை வீடு போன்ற நாட்டிய நாடகங்களையும், சம்மதம், நல்லகாலம், பொற்கிழி, வீதி விடங்கன், வேதநாயகன், இராமகிருஷ்ணா, நம்பியாண்டார் நம்பிகள், வடலூர் அடிகள், மணிவாசகர் போன்ற நாடக நூல்களையும் இயற்றியுள்ளார்.

1970 ஆம் ஆண்டு கலைமாமணி பட்டம் பெற்ற இவர், தனது 82 ஆவது வயதில் இறைவனை அடைந்தார். இவரது பல நூல்கள் மறுபதிப்பு இல்லாமல் மறைந்து கிடப்பது இசையுலகிற்கு பேரிழப்பு ஆகும். அன்னாரது  பாடல்களை  இசை மேடைகளில் மீண்டும் பாடச் செய்து, தமிழிசைக்கு வளம் சேர்ப்பது நமது கடமையாகும்.