Thursday, 18 June 2026

பஞ்சமரபு - இசைத் தமிழ் நூல்

 

சிலப்பதிகாரம் உரையின் மூலம் பல பழந்தமிழிசை நூல்களின் பெயர்களை அறிய முடிந்தாலும், அவை இன்று நமக்கு கிடைக்கவில்லை. இவற்றில் அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட சங்க காலத்தைச் சேர்ந்த பஞ்சமரபு எனும் பழந்தமிழ் இசை நாட்டிய நூல் நமக்கு கிடைத்துள்ளது.

இந்நூலின் ஓலைச் சுவடி, வித்துவான் திரு.வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களால் கண்டெடுக்கப்பட்டு, 1973 இல் முதல் பகுதியும், 1975 இல் இரண்டாம் பதிப்பும் வெளியானது.

பஞ்சமரபு எனும் இசை நூல், கவுண்டர் அவர்களிடம் இருப்பதை அறிந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள், இந்நூலைப் பதிப்பக்க வேண்டி, பொருளுதவி செய்து,  தனது சக்தி அறநிலையம் வெளியீடாக வெளியிட்டார். 

                                  பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள்

இப்பதிப்பின் உதவிக்காக குடந்தை குடந்தை திரு.இராம.திருநாவுக்கரசு அவர்களின் மூலம் பண்ணாராய்ச்சி வித்தகர், குடந்தை திரு.ப.சுந்தரேசனார் அவர்களை வரவழைத்தார். சுந்தரேசனார் அவர்களும் தெய்வசிகாமணி கவுண்டருடன் உடனிருந்து இந்நூலை பதிப்பிற்கு ஏற்றவாறு அமைக்க உதவினார். 

                                                         குடந்தை திரு.ப.சுந்தரேசனார்

மேலும், திருச்செங்கோடு கணபதி குருக்கள், வில்லிபுத்தூர் வித்துவான் கோவிந்த மூப்பனார் இருவரும் இந்நூலின் பதிப்பிற்கு உதவியாக இருந்தனர்.

திரு.வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள், பஞ்சமரபு போன்ற பல அரிய நூல்களை ஓலைச்சுவடியிலிந்து நூலாகப் பதிப்பித்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'பரத சங்கிரகம்' எனும் நூலின் சுவடியைத் தந்து உதவியவரும் இவரே!.

                                                  திரு.வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்

மேற்கண்ட பெரியார்களின் இசைத் தொண்டுகள், தமிழிசை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

நூலின் அமைப்பு:

இசை மரபு, வாச்சிய மரபு, நிருத்த மரபு, அபிநய மரபு, தாள மரபு எனும் ஐந்து மரபுகளையும் பற்றியும் இந்நூல் பேசுவதால், பஞ்ச மரபு என்றழைக்கப்படுகிறது. மேலும் தோல், துளை, நரம்பு, கஞ்சம், மிடறு எனும் 'பஞ்ச மகா சத்தம்' பற்றியும் விவரிப்பதால் பஞ்சமரபு என்றழைக்கப்படும் என்று, வகையொழிபு மரபில் கூறப்படுகிறது. எனவே, இந்நூல் பழந்தமிழரின் இசை மற்றும் நாட்டியத்திற்கு இலக்கணம் கூறும் நூலாக விளங்குகிறது.

தமிழிசை அறிஞர், திரு.வீ.ப.கா.சுந்தரம் அவர்கள், இந்நூலிற்கு விரிவான விரித்தியுரை எழுதி பதிப்பித்துள்ளார். பஞ்சமரபு எனும் இந்நூலில் பிற்காலத்திய இடைச்செருகல்களும் கலந்துள்ளதென்பது அறிஞர்கள் கருத்தாகும்.

இசை ஆய்வாளரரும் முன்னால் பேராசிரியருமான திருமதி அங்கயற்கண்ணி அவர்கள், இந்நூலின் இசைமரபை மட்டும் ஆய்வு செய்து, பஞ்சமரபில் இசைமரபு என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். இந்நூலில், பஞ்சமரபின் சில பகுதிகளைத் தவிர மற்றப் பகுதிகள் 9ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை எழுப்பியுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக பல்வேறு படையெடுப்புகளுக்கும், மொழிகளின் ஆதிக்கத்திற்கும் உள்ளான தமிழ் இசைமரபின் முக்கிய நூலான 'பஞ்சமரபில்' இடைச்செருகல் இருப்பதில் வியப்பில்லை. எப்படி பார்த்தாலும் இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இந்நூல், தமிழர்களின் இசைக்கான அடையாளம் என்பதில் ஐயமில்லை.

 வீ.பா.க.சுந்தரனார் இயற்றிய பஞ்சமரபு -விருத்தியரையை அருட்செல்வர்  நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்டுள்ளது. இந்நூல், இன்று கிடைக்கிறது. அனைவரும் வாங்கி, நமது தமிழிசையின் மரபினை‌ அறிவோம்.

                                                                            முனைவர் ப.கோபாலகிருஷ்ணன்


Saturday, 6 June 2026

சித்தாமூர் கல்வெட்டில் 'நாகசுரம்'

 


 டாக்டர் வி.ராகவன் அவர்கள், நாகசுரமா அல்லது நாதசுரமா என்பதற்கு, நாகசுரமே என்ற பெயரே சரியானது என்று,மியூசிக் அகாடமி வால்யூம் 26, 1955 வருட இதழில் ஒரு  ஆங்கில கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் சித்தாமூர் கல்வெட்டை ஆதாரமாகக் காட்டியுள்ளார். இக்கல்வெட்டின் விவரங்களையும், அதில் உள்ள செய்திகளையும் நாம் இக்கட்டுரையில் காணலாம்.

தென்னாற்காடு (South Arcot) மாவட்டத்தில் உள்ள சிற்றாமூர் (Sirramur) என்னும் ஊரில் இருக்கும் ஒரு சமணக் (Jain) கோயிலில் 16-ஆம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிம்மபுரிநாதசுவாமி (Simhapurinathasvami) கோயிலின் குளக்கரையில் (தாங்கல்) இது செதுக்கப்பட்டுள்ளது.


காலம்: இக்கல்வெட்டு சாகா ஆண்டு 1504, அதாவது கி.பி. 1582-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. விஜயநகர மன்னரான ஸ்ரீரங்கராயர் ஆட்சிக் காலத்தில் இது வெட்டப்பட்டுள்ளது.


கொடையாளி: தஞ்சாவூர் நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கரின் முகவரான (agent) திம்மப்ப நாயக்கர் என்பவர் இக்கொடையை அளித்துள்ளார்.


கல்வெட்டின் செய்தி (இசைக்கலைஞர்களுக்கான மானியம்) :


இக்கல்வெட்டின் மூலம், இந்து மதக் கோயில்களைப் போலவே சமணக் கோயில்களிலும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறைகளும் இசை மரபுகளும் பின்பற்றப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.


கோயிலில் பணிபுரியும் இசைக்கலைஞர்களான உடல்  வாசிப்பவர், நாகஸ்வரக்காரர், மற்றும் நட்டுவனார் ஆகியோரின் பராமரிப்பிற்காக நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு பதிவு செய்கிறது.


தமிழ் மற்றும் சமஸ்கிருதக் கல்வெட்டுப் பகுதி :


"சுபமஸ்து... ஸ்ரீரங்கதேவமஹா ராயர் ராஜ்யம் பண்ணி அருளா நின்ற... திம்மப்ப நாயகன்... ஸிம்மபுரினாத ஸ்வாமியார் திருக்கோயில்... மேளக்காரர் உடொல் நாகசரம் நட்டுவன் ஆக செனம் அஞ்சு பேருக்கும் படிசிவித்துக்கு அடித்தண்டாக..."


இந்தக் கல்வெட்டு வரிகளில் வரும் "நாகசரம்" என்ற சொல்லே, இக்கருவியின் வரலாற்றுப் பெயரை உறுதிப்படுத்த டாக்டர் ராகவன் அவர்கள்  காட்டும் முக்கியச் சான்றாகும். 

ஆனால், நாகசுரம் என்பதற்குப் பதிலாக நாகசரம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எழுத்து பிழையா அல்லது அந்தப் பகுதியில் வழக்கத்தில் இருந்த பேச்சு வழக்ககா என்று தெரியவில்லை. அதைப்போல் தவில் இசைக்கருவிக்குப் பதிலாக உடல் என்ற இசைக்கருவி இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்தக் கல்வெட்டு  South Indian Temple Inscriptions, Vol. I, Madras Government Oriental Series CIV, pp. 42-43 என்ற நூலில்  இடம் பெற்றுள்ளது.

Wednesday, 27 May 2026

"தமிழிசை வள்ளல்" சுவாமி சரவணபவானந்தர்

 

 


'தமிழிசை இயக்கம்' என்று ஒன்று தொடங்குவதற்கு முன்பே,  முதன்முதலில் தமிழிசைப் புரட்சியைத் தூண்டிய மாபெரும் தமிழிசை அறிஞர் 'சுவாமி சரவணபவாநந்தர் ஆவார். 1930 ஆம் ஆண்டு தொடக்கத்தில்,

இசையினிலே தமிழிசைப்போல் இன்னிசையுண்டோ?

இன்பத் தமிழ்க்கிணை ஏது?

கலையைப் பழிக்காதே !

ஞான விநாயகனே !

என்ன தெரிந்து கொண்டாய்?

இத்தனை நாள் என்ன செய்தாய்?

தமிழை மறவாதே !

தானம் அவசியம் !

கதையைச் சொல்வேன் !

தேனொழுகு செந்தமிழிக் கனியைப் பிழிந்து !

பாட்டை கேட்டனையோ?

வடிவழகா!

கலைஞனை உலகம் கைவிடலாமா?

நாடகக் கலை ஒரு ஜீவன் !

ஐயாவின் கருணையினால் இருக்கிறது அதிர்ட்டம்

போன்ற உயிரூட்டமுள்ள பல பாடல்களைப் பாடி இசையுலகத்தில் புகழ்ப் பெற்றவர்.

இசை நிகழ்ச்சிகளின் இறுதியில்  'துக்கடா' எனும் வகையில்  தமிழ்ப் பாடல்கள் பாடப்படும் நிலையில் இருந்த பொது, தொடக்கமாகப் பாடுவதற்கு ஏற்ற பல பாடல்களை இயற்றி தமிழசைக்கு வளம் சேர்த்துள்ளார். அவற்றில், 'ஞானவிநாயகனே' எனும் தொடக்கப் பாடல் இசையுலகில் மிகவும் புகழ்பெற்றதாகும்.

சுவாமி சரவணபவானந்தர் சோழவள நாட்டைச் சேர்ந்த நாகப்பட்டினத்தில், சைவ சமயம் சார்ந்த கௌமார மரபில், துரைசாமி - வள்ளியம்மை எனும் தம்பதியருக்கு மகனாகப்  பிறந்தவர். இவரது இயற்பெயர் திருவரசமூர்த்தி என்பதாகும். இவரது வளர்ப்புத் தந்தை அரங்கசாமி என்பவராவார்.

இவர், ஆசிரியர் இராமலிங்கத் தேசிகர் அவர்களிடம் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்விக் கற்றார். தனது ஒன்பதாவது வயதில், முதுகுளத்தூர் பிச்சைக் கவிஞரிடம் இலக்கிய - இலக்கணப் பயிற்சிப் பெற்றார்.  தனது 12 ஆம் வயதில், நாகை துரைராஜ் என்பவரிடம் இசைப் பயின்றார். 16 ஆம் வயதில், இவருக்கு ஆறெழுத்து உண்மையினை அறிவித்து 'சரவணபவாநந்தா' எனும் தீட்சை பெயர் அளித்தவர், நீலகிரி - பிரம்ம ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் ஆவார்.

இவரது 19 ஆம் வயதில், சித்தர்கள் தத்துவம் உணர்த்தி, ஞான தீட்சை செய்து 'ஞான பண்டிதன்'என்னும் சிறப்புப் பெயர் தந்தனர்  திரிசிரபுரம் - பிரம்ம முடி  யதீந்திர சுவாமிகள். மகான் மாக்கான் சுவாமிகளிடம் இதோபதேசம் பெற்றார். உறையூர் நிர்வாண சுவாமிகளிடம் மெளனோபதேசம் பெற்றார். சித்தர் சுவாமிகளிடம் பலநாள் பழகியவர்.

தனது 20 ஆம் வயதில் சரஸ்வதி அம்மாள் எனும் குணவதியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். இவரது மகள் கார்த்திகாயனி, மகன் ஜோதிநாதன் ஆவார்.

இவரது பாடல்கள், பக்திப் பாடல்களாகவும், கருத்துவளம் செறிந்த தத்துவப் பாடல்களாகவும் இனிமையுடன் அமைந்துள்ளன. வள்ளலார் மீதும், சித்தர்கள் மீதும் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களின் சுவையை கவியோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு பாடுகிறார்.

வள்ளலார் வடித்த தேனும்

வேதநா யகனார் வார்த்த

தெள்ளிசை அமுதும்  உண்டு

தேனிசைத் திரட்ட ளித்தான்

தள்ளருந் தமிழ்த் தேன் பொங்கும்

சரவண பவன்என்  அன்பன்

உள்ளெலாம் உவப்பக் கூடி

உருகித்தேன் பருகு வோமே !

சுவாமிகள் இசைக்கேற்ற பல பாடல்களை எழுதி அவற்றை நூல்களாகவும் வெளியுட்டுள்ளார். அவை, இசைத்தேன், ஞானத்தமிழ், தேனிசைத் திரட்டு, குமரகுரு பஜனாமிர்தம், பேரின்ப கீதம், விற்பன்னர் அற்புத கீதம், முருக ஸ்மரணாமிர்தம், அருள் இசை அமுதம் போன்றவையாகும். இந்த இசை நூல்கள் மறு பதிப்பு இல்லாமலும், அனைவராலும் அறியப்படாமல் மறைந்து கிடக்கின்றன.

இசைப்பாடல்களோடு அல்லாமல் சிலப்பதிகாரம், மணிமேகலை, மாதவி, வாசுகி, அருளரசி, ராதையின் காதல், சுடர்க் கொடி, ஆறுபடை வீடு போன்ற நாட்டிய நாடகங்களையும், சம்மதம், நல்லகாலம், பொற்கிழி, வீதி விடங்கன், வேதநாயகன், இராமகிருஷ்ணா, நம்பியாண்டார் நம்பிகள், வடலூர் அடிகள், மணிவாசகர் போன்ற நாடக நூல்களையும் இயற்றியுள்ளார்.

1970 ஆம் ஆண்டு கலைமாமணி பட்டம் பெற்ற இவர், தனது 82 ஆவது வயதில் இறைவனை அடைந்தார். இவரது பல நூல்கள் மறுபதிப்பு இல்லாமல் மறைந்து கிடப்பது இசையுலகிற்கு பேரிழப்பு ஆகும். அன்னாரது  பாடல்களை  இசை மேடைகளில் மீண்டும் பாடச் செய்து, தமிழிசைக்கு வளம் சேர்ப்பது நமது கடமையாகும்.

Saturday, 14 March 2026

எழுபத்திரெண்டு மேளகர்த்தாவும் பதினாறு சுரங்களும்

 


     கர்னாடக இசையில், அடிப்படைச் சுரங்கள்  சட்சமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என ஏழு சுரங்களாகும். இந்த ஏழு சுரங்களும் ஒரு ராகத்தின் ஆரோகண அவரோகணத்தில் முழுமையாக வரும்பொழுது அவை, மேளகர்த்தா என்றும் தாய் ராகம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த ஏழு சுரங்கள்,  பன்னிரண்டாகி பின்பு பதினாறாகி எவ்வாறு 72 மேளகர்த்தாக்களாக விரிவடைகிறது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

     ச ரி க ம ப த நி என்ற ஏழு சுரங்களில் ச வும், ப வும் மாறாத நிலையான சுரங்களாகும். மற்ற ரி க ம த நி என்ற ஐந்து சுரங்களும் முறையே இரண்டு வகைப்படும். இதனால், கூடுதலாக ஐந்து சுரங்கள் உண்டாகி மொத்தம் 5+5+2 = 12 சுரங்களாகின்றன. எனவே, இசையில் மொத்தம் 12 சுரங்கள் உள்ளன. இதன் மூலமாகவே ராகங்கள் உருவாகின்றன. இதை,  வீணையில் உள்ள பன்னிரண்டு மெட்டுகள்  மூலமாக நாம் உணர முடியும்.

     இந்த 12 ஸ்வரங்கள் மூலமாகவே பெரும்பாலான ராகங்கள் உருவாகின்றன. ஆனால், 17 நூற்றாண்டைச் சேர்ந்த வெங்கடேஸ்வர தீட்சிதர் எனும் வேங்கடமகி அவர்கள், தனது சதுர்தண்டி பிரகாசிகை எனும் நூலில், 12 ஸ்வரங்களோடு மேலும் 4 சுரங்களைக் கூட்டி பதினாறு சுரங்களாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் 72 மேளகர்த்தா ராகங்களை உருவாக்கியுள்ளார்.

 வேங்கடமஹி அவர்கள் கூறியுள்ள நான்கு சுரங்களுக்கும் தனியான ஸ்வரஸ்தானங்கள் கிடையாது. இது, மற்ற ஸ்வரத்தின் இடத்திலேயே செயற்கையாக பாடப்படுகிறது. அதாவது, ரி க த நி என்னும் சுரங்களில் சதுஸ்ருதி ரிஷபத்தின் (ரி 2) இடத்தில் சுத்த காந்தாரத்தையும், சாதாரண காந்தாரத்தின் (க 1) இடத்தில் சட்சுருதி ரிஷபத்தையும் உருவாக்கினார். அது போல சதுஸ்ருதி தைவதத்தின் (த 2) இடத்தில் சுத்த நிசாதத்தையும், கைசிகி நிசாதத்தின் இடத்தில் சட்சுருதி தைவதத்தையும் உருவாக்கினார். இதனால் 16 சுரங்கள் உருவானது. இதன் மூலம் 72 மேளகர்த்தாவை அவர் உருவாக்கினார்.

 

பன்னிரண்டு ஸ்வரங்கள் பதினாறாவது :

ச  - சட்சமம்

ரி 1 - சுத்த ரிஷபம்

ரி 2 - சதுஸ்ருதி ரிஷபம்                    - சுத்த காந்தாரம்

க 1 - சாதாரண  காந்தாரம்              - சட்சுருதி ரிஷபம்

க 2 - அந்தர காந்தாரம்

ம 1 - சுத்த மத்திமம்

ம 2 - பிரதி மத்திமம்

ப   - பஞ்சமம்

த 1  - சுத்த தைவதம்

த 2 - சதுஸ்ருதி தைவதம்                 - சுத்த நிசாதம்

நி 1 - கைசிகி நிஷாதம்                     - சட்சுருதி தைவதம்

நி 2 - காகலி நிஷாதம்

 

        சுத்த காந்தாரம், சட்சுருதி ரிஷபம், சுத்த நிஷாதம், சட்சுருதி தைவதம் என்ற நான்கு ஸ்வரங்களும் விவாதி ஸ்வரங்கள் என்றும், இதில் அமைந்த ராகங்கள் விவாதி ராகங்கள் என அழைக்கப்படுகின்றன. இயற்கையான 12 ஸ்வரங்கள் மூலமாக உருவாகும் 32 மேளகர்த்தா ராகங்களும், விவாதி ஸ்வரங்கள் மூலமாக உருவாகும் 40 மேளகர்த்தா ராகங்களும் சேர்ந்து 72 ஆகின்றன.

     வேங்கடமஹி அவர்கள் இயற்றிய இந்த முறை, அவரது காலத்தில் பின்பற்றப் படவில்லை. பிற்காலத்தில் சங்கீத மும்மூர்த்திகளில் ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரும், ஸ்ரீ தியாகராஜரும் இம்முறையைப் பின்பற்றி கீர்த்தனைகளை பாடியதால் இம்முறை புகழ் பெற்றது. முமூர்த்திகளைத் தொடர்ந்து, மகா வைத்தியநாதய்யர் , கோடிஸ்வரய்யர், யாழ்ப்பாணம் வீரமணி அய்யர், டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, என்.எஸ். சிதம்பரம் போன்றோர், 72 மேளகர்த்தாவிலும் கீர்த்தனைகளை இயற்றியுள்ளனர்.

     இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 72 மேளகர்த்தா முறை எங்கும் பரவிய போது தொடக்கத்தில் இசைக்கலைஞர்களிடையே சர்ச்சைகளையும் குழப்பத்தையும் உண்டாக்கியது. மதுரை நாகசுர வித்வான் திரு.எம்.பொன்னுசாமி பிள்ளை வேங்கடமகியின் கொள்கையையும், 72 மேளகர்த்தா முறையையும் மறுத்து 'பூர்வீக சங்கீத உண்மை ' எனும் நூலை வெளியிட்டார். ஆனால், மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இயற்கையின் விதியின் படி, இன்று அனைவராலும் 72 மேளகர்த்தா முறை ஏற்றுக் கொள்ளப்பட்டு, கர்னாடக சங்கீதத்தின் இலக்கணமாகவும் விளங்குகிறது.