Friday, 31 October 2025

 

நாகசுர நல்லாசிரியர் திருநாகேஸ்வரம் இராஜகோபால் பிள்ளை

நாகசுர உலகில் சிறந்த மேதையாகவும், சாகித்திய கர்த்தாகவும் திகழ்ந்த திரு. இராஜகோபால் பிள்ளை, பாம்பன் சுவாமிகள் சீடர் பரம்பரையில் ஒருவராகவும், சித்த புருஷராகவும் திகழ்ந்தவர். இவர், கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் எனும் ஊரில், திரு.இராமையாபிள்ளைக்கும், ஜானகி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர். ஆனால், இவர் வளர்ந்தது, சிதம்பரம் அருகில் உள்ள ஆச்சாள்புரம் எனும் ஊரில் ஆகும்.

இவர், தனது ஆரம்ப நாகசுரக் கல்வியை ஆச்சாள்புரம் திரு.முருகையா பிள்ளையிடம் கற்றுக்கொண்டார். மேற்படி கற்றுக் கொள்ள, பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சீடரும், நாகசுரம் வாசிக்க தெரிந்தவருமான சிதம்பரம் தண்டபாணி சுவாமிகளிடம் சீடராக சேர்ந்தார். அவரிடம் யோகக் கலையையும் கற்றுக் கொண்டு, சிறந்த முருக பக்தரானார்.  திரு. தண்டபாணி சுவாமிகளின் மூலம் சிதம்பரம் இராதாகிருஷ்ண பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்த இராஜகோபால் பிள்ளை, விரைவில் மிகச் சிறந்த நாகசுரக் கலைஞராக உருவாகினார். சிதம்பரம் கோயிலின் இசை மரபு அனைத்தையும் நன்கு அறிந்து, தீட்சிதர்களின் நன்மதிப்பையும் பெற்ற சிறந்த நாகசுரக் கலைஞராக விளங்கினார்.

சென்னை நங்கநல்லூர் ராஜ ராஜேஸ்வரி கோவிலில் ஆஸ்தான வித்வானாக இருந்த இராஜகோபால் பிள்ளை, கோயம்புத்தூர் அரசு இசைப் பள்ளியில் நாகசுர ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு, பழனி தண்டாயுதபாணி  தேவஸ்தான இசைக் கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து,  பல சிறந்த மாணவர்களை உருவாக்கி, நாகசுர நல்லாசிரியராக திகழ்ந்தார்.

திரு, இராஜகோபால் பிள்ளை இருபதிற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். அதை, தனது மாணவர்களுக்கும் சொல்லித் தந்துள்ளார். அவற்றில் இரண்டு கீர்த்தனைகள் மட்டுமே இப்பொழுது அறிய முடிகிறது.  அவை பின்வருமாறு,

 

1. இராகம் : வலசி         தாளம் : மிஸ்ரம்

பல்லவி

குழந்தை வேலப்பா குன்றுதோர் ஆடும்

குமரன் ஆவினன் குடியில் இருக்கும் (குழந்தை )

அனுபல்லவி

பழம் பெரும் பண்பாளர் பாதம் கொண்டாடும்

பழனி பதியிலே நீ அருகில் நின்றாடும்

சரணம்

உழன்றேன் மாய உலகில் உண்மையறிந்திலேன்

உன் திருவடியில் நாயேன் புகுந்தேன்

அனுசரணம்

மழலைப் போல் என்னை ஏற்பாயோ என் உள்ளம்

மன்றாடினேன் என்னை கைவிடுவாயோ கரம்

 

2. இராகம் : சரஸ்வதி               தாளம் : ஆதி

பல்லவி

குமர குருதாச கிருபை வேண்டும்

குற்றம் தீர்ந்திட அவர் துணை வேண்டும்

அனுபல்லவி

அமர்ந்து நெஞ்சம் அடங்கிடல் வேண்டும்

ஆன்ம லாபத்தை தொழுதிட வேண்டும் (குமர குருதாச)

சரணம்

பூ மலர் மனத்தால் போற்றிட வேண்டும்

புவிதனில் விழுமுன் மெய்யறிய வேண்டும்

அனுசரணம்

விமலன் தாஸர் அருள் ஒளி வேண்டும்

விரைவில் பாதம் கண்டு சரண் புக வேண்டும்

மேற்கண்ட கீர்த்தனைகள் அவருடைய மாணவர்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. அவை  தவிர, 'அப்பனே பழனியப்பா ஞானதண்டாயுதபாணியே' , 'பித்து பிடித்தவன் நானய்யா பித்தனம் நீயே முருகா', போன்ற கீர்த்தனைகளையும் பெயரளவில் அறியமுடிகிறது. மேலும், பின்வரும் காமியத் தழுந்தி எனும் திருப்புகளுக்கு கானடா ராகம் ஆதி தாளத்தில் இசை அமைத்துள்ளார்.

கா மி ய தழு ந்தி  யிளையாதே

கா லர் கைப்      படிந்து  மடி யா   தே

ஓ  மெ லுத் தி   லன்பு    மிக வூ    ரி

ஓ வி யத்  தி லந் த   மருள்  வா  .  .  .  .யே

தீவிர முருகப் பக்தராக விளங்கிய ராஜகோபால் பிள்ளை, தனது குருநாதர் சிதம்பரம் தண்டபாணி சுவாமிகளின் அஸ்தியை சமாதியாகச் செய்து அதன் மீது அமர்ந்து நாள்தோறும் தியானம் செய்து வந்தார்.



பாம்பன் சுவாமிகள் மயூர வாகன சேவன விழாவும், மகா முனிவர் போகர் நினைவு நாளையும் பதினைந்து வருடங்களாக இசைக்கச்சேரியுடன் விழாவாக நடத்தினார். 











பாம்பன் சுவாமிகள் இயற்றிய பகை கடிதல், குமாரஸ்தவம், ஷண்முக கவசம், தெளத்தியம் போன்ற பாடல்களை கையடக்க பாராயண நூலாகவும் வெளியிட்டார். அனுதினமும் முருகனையே நினைந்து தியானம் செய்து, சித்த புருஷராக வாழ்ந்த திருநாகேஸ்வரம் டி.ஆர்.இராஜகோபால் பிள்ளை, 2016 ஆம் ஆண்டு, ஆடி மாதம் 7 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமையன்று காலை 7.45 மணிக்கு  பழனியில் தனது இல்லத்திலேயே ஜீவ சமாதி ஆனார். இவரது மாணவர்கள் ஆண்டு தோறும் இவரது நினைவு நாளில் குருபூஜையை நடத்தி வருகின்றனர்.  

  

No comments:

Post a Comment