72 மேளகர்த்தா இராகங்கள் வரலாறு - ப.கோபாலகிருஷ்ணன்
இந்திய இசையானது, இரு
வகையில் விளங்குகிறது. தென்னிந்தியாவில் வழங்கும் இசை கர்னாடக இசையென்றும், வட இந்தியாவில் வழங்கும் இசை
இந்துஸ்தானி என்றும் அழைக்கப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டு வரை, இந்தியா முழுவதும் ஒரே விதமான இசை மரபே வழக்கத்தில் இருந்தது. வட
இந்தியாவில் முகலாயர்கள் படையெடுப்பினால், பாரசீக இசையின் கலப்பு ஏற்பட்டு
இந்துஸ்தானி இசை தோன்றியது. ஆனால், தென்னிந்தியாவில்
அத்தகைய படையெடுப்பு பெரிய அளவில் நடை பெறாததால், கலப்பு ஏதுமின்றி தற்காலம் வரை கர்னாடக
இசையாக நிலைத்து நிற்கிறது.
கர்னாடக இசையென அழைக்கப்படும் தென்னிந்திய இசையில், இராகங்கள் மேளகர்த்தா என்றும், ஜன்யம் என்றும்
வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேளகர்த்தா என்பது தாய் ராகங்களாகும் ; அதிலிருந்து பிறந்த சேய் இராகங்கள்,
ஜன்ய ராகங்கள் என்று அழைக்கப்படுகிறது.
சப்த ஸ்வரங்கள் எனப்படும் ஏழு ஸ்வரங்களையும் கொண்ட ராகங்கள் தாய்
ராகங்கள் அல்லது மேளகர்த்தா எனப்படும். மேளம் எனப்படுவது வடமொழியில் குழு அல்லது
தொகுதி என பொருள்படும். எனவே, ஒரு தொகுதியைச் சேர்த்த ராகங்களுக்கு
தலைமையான ராகம் ‘மேளகர்த்தா’ என அழைக்கப்டுகிறது. ஏழு ஸ்வரங்களுக்கும்
குறைவான ஸ்வரங்களைக் கொண்ட ஒரு தலைமை ராகத்தைச் சேர்த்த ராகங்கள்,
ஜன்ய ராகங்கள் என அழைக்கப்படும். இவ்வாறு, கர்னாடக இசையில் 72
மேளகர்த்தா ராகங்களும்,
அதன் கீழ் ஆயிரக்கணக்கான ராகங்களும்
உள்ளன. இந்த 72 மேளகர்த்தா முறையினை முதன் முதலில் வடிவமைத்தவர் வேங்கடமகி எனும்
வேங்கடேஸ்வர தீட்சிதர் ஆவார்.
72 மேளகர்த்தவை வடிவமைத்த வேங்கடமகி அவர்கள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர்,
நாயக்கர் ஆட்சியில் தலைமை மந்திரியாக
இருந்த கோவிந்த தீட்சிதரின் மகனாவார். வேங்கடமகி அவர்கள், தான் இயற்றிய சதுர் தண்டி பிரகாசிகை
எனும் வடமொழி இசை இலக்கண நூலில், 72 மேளகர்த்தாவின் அமைப்பை
விளக்கியுள்ளார். இவரது காலத்திலும், அதற்கு முன்பும் 20 தலைமை ராகங்களே வழக்கில் இருந்துள்ளன.
மேலும், இவர் 72 மேள ராகங்களுக்கும் ராக இலக்கண
சுலோகங்களையும் இயற்றியுள்ளார்.
திரு. வேங்கடமஹி அவர்கள் உருவாக்கிய 72 மேளகர்த்தா முறையும்,
பெயர்களும் பிற்காலத்தில் பின்பற்றப்பட வில்லை. இந்த முறையைப் பின்பற்றி முத்துசாமி
தீட்சிதர் மட்டுமே கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
கோவிந்தாச்சார்யார், தான் இயற்றியுள்ள 'சம்க்ரஹ சூடாமணி' எனும் நூலில், அதனை திருத்தி அமைத்துள்ள மேளகர்த்தா
முறையே தற்காலத்தில் பின்பற்றப்படுகிறது.
72 மேளகர்த்தா முறையை நிர்ணயம் செய்த வேங்கடமஹி
காலத்தில் இது இசையுலகில் புகழ் பெறவில்லை . அவருக்கு 150
ஆண்டுகளுக்கு பின்பு தோன்றி சங்கீத மும்மூர்த்திகளாக விளங்கிய ஸ்ரீ
முத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்ரீ தியாகராஜர்,
ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள் காலத்திலேயே
புகழ் பெற்றது. முத்துஸ்வாமி தீட்சிதர், வேங்கடமஹி சிஷ்ய பரம்பரையைச்
சேர்த்தவராதலால் அவரது முறையைப் பின்பற்றியே கீர்த்தனைகளை செய்துள்ளார். தியாகராஜர்
அவர்கள் சம்க்ரஹ சூடாமணி நூலில் உள்ள 72 மேளகர்த்தா முறையினைப் பின்பற்றி
கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ஸ்ரீ தியாகராஜரின் நீண்ட சிஷ்ய பரம்பரைக் காரணமாக
அம்முறையே கர்னாடக இசையுலகில் தற்காலத்தில் நிலைப் பெற்றுள்ளது. எனவே, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்
கர்னாடக இசையில் ஏற்பட்ட மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் 72
மேளகர்த்தா ராகங்களின் தோற்றமும்,
சங்கீத மும்மூர்த்திகளின் பங்களிப்புமே
காரணமாகும்.
தற்காலத்தில் பின்பற்றப்படும் மேளகர்த்தா முறையில் அமைந்துள்ள
தியாகராஜர் கீர்த்தனைகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அதிக புகழ்பெற தொடங்கியது. எனவே,
72 மேளகர்த்தா
முறையும் புகழ் பெற்றது. இதனை, இசை மேதை மஹாவைத்திநாதய்யர் காலமாக
நாம் கூறலாம். இசை உலகில் முதன்மையான வித்வானாக இருந்த வைத்தியனாத அய்யர்,
தியாகராஜரின் புதிய கீர்த்தனைகளை,
தனது கச்சேரிகளில்
அறிமுகப்படுத்தினார்.
மகா வைத்தியநாதய்யர் :
19 ஆம்
பிற்பகுதியில் வாழ்ந்த முதன்மைப் பெற்ற இசைக்கலைஞர்,
வையச்சேரி மஹாவைத்தியநாத சிவன் . இவர் சகோதரர், ராமசாமி சிவன் ஆவார். இவர்கள் தமிழ், வடமொழியில் தேர்ச்சியடைந்தவர்களாகவும்,
தியாகராஜரின் நேர் சீட பரம்பரையான,
மானம்பூச்சாவடி வேங்கட சுப்பையரின்
சீடர்களாகவும் இருந்தவர்கள். மகா வைத்தியநாதய்யர் சங்கீத சாஸ்திரங்களையும், சம்கிரஹ சூடாமணி எனும் நூலையும் கற்றறிந்தவர்.
மகா வைத்தியநாத அய்யரின் இளம் வயதில், கல்லிடைக்குறிச்சி மடத்தில் நடைப்பெற்ற
குருபூஜை விழாவில், சிவகங்கை பெரிய வைத்யநாதய்யர், சிறிய வைத்யநாதய்யர் முன்னிலையில்,
மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் அவர்களால்,
வைத்தியநாத அய்யருக்கு "மஹா" எனும் பட்டம் வழங்கப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் வைத்தியநாதய்யர் சக்ரவாக ராகத்தில் அமைந்த சுகுணமுலே எனும்
தியாகராஜ கீர்த்தனையைப் பாடிய பொழுது, அங்கிருந்த அனைவராலும் அந்த கீர்த்தனத்தையும்,
சக்கரவாகம் ராககத்தையும்
அறியமுடியவில்லை என வைத்யநாதய்யரின் சிஷ்யர் வாசுதேவநல்லூர் சுப்பையா பாகவதர்,
"இசை உலகில் மகா
வைத்தியநாத சிவன்" எனும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
மேலும் "அக்காலம் இம்முறைகளை அறிந்தோரில்லை.
மகாவைத்யநாத சிவன் சிறுவயதிலேயே இசை நூல் ஆராய்ச்சியையும் அறிந்தவர். ஆதலால்
அவரைத்தவிர வேறு எவருக்கும் இந்த எழுபத்திரெண்டு முறைகள் பற்றிய செய்திகள் எதுவும்
தெரியாது. அம்முறைகளெல்லாம் அக்காலத்திய வித்வான்களுக்குப்
பழக்கமில்லை."என்றும் குறிப்பிடுகிறார்.
இதனால், அக்காலத்தில் 72 மேளகர்த்தா முறை ஒரு சிலரைத்தவிர மற்ற
இசைக்கலைஞர்களிடம் பழக்கத்தில் இல்லை என அறிய முடிகிறது.
மேலும், தஞ்சை இரண்டாவது சிவாஜி அரசரின் மாப்பிளை சஹாராம் சாகேப் அவர்கள்,
அரண்மனையிலிருந்த 72 மேளகர்த்தவையும் விளக்கும் செய்யுள்
ஒன்றிற்கு இசையமைப்புச் செய்து அதனை பரப்புதல் வேண்டும் என்று,
எண்ணம் கொண்டு பல இசைப்புலவர்கள்
மூலமாக முயற்சி செய்தார். யாராலும் இயலவில்லை என்பதையறிந்த சகாராம் சாகேப்,
மகா வைத்தியநாத அய்யரைக் கேட்டுக்
கொள்ள, அவரும் இசையமைத்து, இசை மேதைகள் கூடிய அவையில் சமஸ்தான வித்துவான் வீணை ஆதி மூர்த்தி
அய்யர் தலைமையில் பாடி அரங்கேற்றினார்.
பிறகு, திருவையாறு பிரணதார்த்திஹரர் சுவாமி மேலே எழுபத்திரெண்டு
மேளகர்த்தாவில் ராகமாலிகைச் செய்து சுவாமி சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார்.
அதற்கு அவரது சகோதரர் ராமசாமி சிவனால்
சிட்டை ஸ்வரம் அமைக்கப்பட்டு மகாவைத்தியநாத அய்யரின் இரண்டாவது குமாரரான
விசுவநாத அய்யரால் அச்சிடப்பெற்று நூலாக வெளியிடப்பட்டது.
ஸ்ரீ தியாகராஜரின் சீடப்பரம்பரையாலும்,
முக்கிய இசைக்கலைஞர்களாலும் 1906 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்,
முதல் உத்சவ ஆராதனை தொடங்கியது ; அது முதலே அவரது கீர்த்தனைகள் புகழ்
பெற்று 72 மேளகர்த்தா முறையும் நிலைப்பெற்றது. 1912 ஆம் வருட உத்சவத்தில் வீணை சபேசய்யர் 72 மேள கார்த்த ராகத்தையும்,
கனகாங்கி முதல் ஆரம்பித்துப் பாடி
பல்லவியையும் ஸ்வரப்ரஸ்தாரத்தையும் பாடி அனைவரையும் பிரமிக்க செய்தார் .
மேற்கண்ட செய்தியினால்,
மகா வைத்தியநாத அய்யர் அவரது காலத்தில்
முதன்மை வித்வானாக இருந்ததால், அவரது 72 மேள
ராகமாலிகை மூலமாக, 72 மேளகர்த்தா முறை இசைக்கலைஞர்களிடம்
புகழ் பெற்றது என்பதை அறியமுடிகிறது.
No comments:
Post a Comment