Wednesday, 18 February 2015

“தாள இராக மாலை” - இசை இலக்கண நூல் நாதஸ்வர வித்வான் எம்.ஜி.குப்புசாமி




   தாள இராக மாலை எனும் இசை இலக்கண நூல் 1964 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பழமையான நூலாகும். இந்நூலை இயற்றியவர் நாதஸ்வர வித்வான் எம்.ஜி.குப்புசாமி ஆவார். தமிழ் நாட்டின் மிகவும் பழமையான இசைக்கருவி நாதஸ்வரமாகும். நமது இசையை பல நூற்றாண்டுகளாக அழியாது பேணிப் பாதுகாத்து வந்ததில் நாதஸ்வர தவில் கலைஞர்களின் பரம்பரைக்கு பெரும் பங்குண்டு. இவர்களில் பலர் இசையோடு சேர்ந்து இயலிலும் தேர்ச்சியடைந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த நூற்றாண்டில் பல நாதஸ்வர கலைஞர்கள் தமிழில் கீர்த்தனங்கள் மற்றும் வர்ணங்கள் போன்றவற்றை இயற்றியள்ளனர். அவற்றில் சில நூலாகவும் வெளிவந்துள்ளன. 20ம் நுற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நாதஸ்வர மேதை  மதுரை எம் .கே.எம். பொன்னுசாமி பிள்ளை அவர்கள் இயற்றிய “பூர்வீக சங்கீத உண்மை” எனும் நூல் மிகச்சிறந்த ஆராய்ச்சி நுலாகும். இந்நூலை வழி நூலாகக் கொண்டு நாதஸ்வர வித்வான் எம் .ஜி குப்புசாமி அவர்கள் "தாள இராக மாலை" எனும் இசை இலக்கண நூலை இயற்றியுள்ளார் .


இந்நூலின் ஆசிரியரைப் பற்றி:
  
  இந்நூலின் ஆசிரியர் எம்.ஜி.குப்புசாமி அவர்கள் சென்னை ஆவடி மேட்டுபாளையத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் எம்.எம். கோவிந்தசாமி அவர்கள்.  இவரது ஆரம்ப ஆசிரியர்கள் வி.கே.சின்னப்பா, எம்.கே.சிங்காரம் போன்றோர்கள் ஆவர்.
  
  எம்.ஜி.குப்புசாமி அவர்கள் 30 ஆண்டு காலமாக ஆராய்ச்சி செய்து இந்நூலை வெளியிட்டுள்ளார் என்பது அவரின் முன்னுரையிலிருந்து தெரிய வருகிறது. மேலும் இந்நூலை வெளியிட நாதஸ்வர ராஜா திருவெண்காடு டி.பி.சுப்ரமணியப்பிள்ளை அவர்களும் மதுரை நாதசுர பூஷிணி ஸ்ரீமதி எம்.எஸ். பொன்னுத்தாய் அவர்களும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் பொருளுதவி செய்துள்ளனர் என்ற செய்தி வியப்பைத் தருகிறது.


தாள இராக மாலை:
  இந்த இசை நூலுக்கு கவியோகி மகாரிஷி ஸ்ரீசுத்தானந்த பாரதியார்  அவர்கள் விரிவான அணிந்துரை வழங்கியுள்ளார்  முன்னால் முதல் அமைச்சர் எம். பக்தவத்சலம் அவர்கள் சிறந்த மதிப்புரைக் கொடுத்துள்ளார். மேலும் இசையறிஞர்களும் பிரபலமான இசைக் கலைஞர்களும் மதிப்புரைகள் வழங்கியுள்ளனர்.

மதிப்புரை வழங்கியவர்கள்:
· இசையறிஞர் திரு. P.சாம்பமூர்த்தி
· கவியோகி திரு சுத்தானந்த பாரதியார்
· முடிகொண்டான் C . வெங்கட்ராமஅய்யர்
· மதுரை மாரியப்பசாமி அவர்கள்
· நாதஸ்வர ராஜா திருவெண்காடு P.சுப்ரமணியம் பிள்ளை
· நாதஸ்வர சக்கரவர்த்தி சென்னை P.ஐ.நடேசப்பிள்ளை
· திருவிடைமருதூர் நாதஸ்வர வித்வான் P.ளு.வீருசாமிபிள்ளை
· மதுரை நாதஸ்வர பூஷிணி ஸ்ரீமதி P.ளு.பொன்னுத்தாய்
· மதுரை சகோதரர்கள் M.P.N.சேதுராமன்,M.P.N. பொன்னுசாமி
· நாதஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை K .கிருஷ்ணன்
· நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி  K..P.அருணாச்சலம்
· நாதஸ்வர வித்வான் திருமெய்ஞானம் வு.P.நடராஜசுந்தரம்
· திருச்சி கிளாரினெட் எவரெஸ்ட் A.K.C.நடராஜன்
· நாதஸ்வர வித்வான் திருச்சேறை T.V.S.சிவசுப்ரமணியப்பிள்ளை
· நாதஸ்வர சிற்பி N.ரங்கநாத ஆச்சாரியார்
· நாஸ்வர வித்வான் திருவாளபுத்தூர் T.K .வேணுப்பிள்ளை
· தவில் வித்வான்கள்  நாச்சியார்கோவில் N.P.இராகவப்பிள்ளை
·               "                             நீடாமங்கலம் ; N.T.M.ஷண்முகவடிவேல்
·                                               யாழ்ப்பாணம் V.தட்சிணாமூர்த்தி
·                                               கொரனாடு K.P.கோவிந்தராஜலு 
·                                               சென்னை C .P. நாரயணசாமி
·                                               பொறையார் P.R. வேணுகோபால் பிள்ளை

  போன்றவர்கள் இந்த நூலின் கருத்திற்கு ஆதரவாக மதிப்புரை வழங்கியுள்ளனர்.
                                                       





   இதில் ஆசிரியர் பழைய இசைநூல்களின் கருத்துகளையொட்டி இராகத்தின் இலக்கணங்களையும் தாளத்தின் இலக்கணங்களையும் அடிப்படையிலிருந்து விரிவாகத் தொகுத்து விளக்கியுள்ளார். மதுரை பொன்னசாமி பிள்ளை அவர்களின் “பூர்வீக சங்கீத உண்மை” எனும் ஆராய்ச்சி நூலின் முடிவினை உறுதியாக ஏற்று மேளகர்த்தா ராகங்கள் 32 தான் இயற்கையானது, உண்மையானது என்று தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியள்ளார். 

  மேலும் 32 மேளகர்த்தா(தாய்ராகம்) ராகங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 483 கிளைராகங்கள் பிறக்கின்றன என்றும் மொதத்தமாக 15488 ராகங்கள் என்றும் கணக்கிட்டு காட்டியுள்ளார;. 32 மேளகர்த்தா ராகங்களிலிருந்து பிறக்கும் கிளைராகங்களின் பெயர்களையும் ஸ்வரஸ்தானங்களையும் கொடுத்துள்ளார்.
                                                                
 


  ஆசிரியர் தாளத்தினத்தைப் பற்றி விரிவாக விளக்கியள்ளார். பிற்காலத்திய இசைநூல்களில் தாளத்தின் ஜாதிகள் 5 எனவே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ஆசிரியர் 6வது ஜாதியாக “சங்கரமஜாதி” எனும் பூர்வ முறையை சேர்த்து 42 தாளங்கள் என விளக்கி அதன் அங்கங்களையும், அட்சரங்களையும் விளக்கியுள்ளார். அந்த 42 தாளங்களையும் பயிற்சி செய்வதற்காக 42 “அலங்காரங்கள்” எனப்படும் ஸ்வர வரிசைகளையும் கொடுத்துள்ளது சிறப்பாகும். மேலும் 108 தாளங்கள், 32, 40, ஆக 72 மேளகர்த்தா பெயர்களில் 72 தாளங்களையும் அதன் அங்கக்குறிகளையும், அட்சரங்களையும் இந்த அரிய நூலில் விளக்கியுள்ளார். அதோடு கூட இசைப்பயிற்சிக்கு ஏற்ற ஆரம்ப பாடங்களையும் தந்துள்ளார்.


  இசையைப் பற்றிய மிகவும் பழைய நூல்கள் இருந்தாலும் அதைப் படித்துபுரிந்து கொள்ளும் எளிமை அதில் இல்லையென்பது இன்றைய இளைஞர்களின் ஆர்வமின்மைக்கு ஒரு காரணமாக அமைகிறது. எம்.ஜி.குப்புசாமி அவர்கள் நீண்ட காலமாக பழைய நூல்களை ஆராய்ந்து எளிமையான முறையில் தொகுத்து வழங்கியுள்ள “தாளஇராகமாலை” எனும் இசை இலக்கண நூல் தற்கால இளம் இசைகலைஞர்களுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் பயன்படும் வகையில் மறுபதிப்பு செய்து பாதுகாக்கப்படுவது மிகவும் அவசியமானதாகும். 

1 comment: